/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உயிர்பலி வாங்க காத்திருக்கும் பாழடைந்த குடியிருப்பு அச்சத்தில் ஜாபர்கான்பேட்டை மக்கள்
/
உயிர்பலி வாங்க காத்திருக்கும் பாழடைந்த குடியிருப்பு அச்சத்தில் ஜாபர்கான்பேட்டை மக்கள்
உயிர்பலி வாங்க காத்திருக்கும் பாழடைந்த குடியிருப்பு அச்சத்தில் ஜாபர்கான்பேட்டை மக்கள்
உயிர்பலி வாங்க காத்திருக்கும் பாழடைந்த குடியிருப்பு அச்சத்தில் ஜாபர்கான்பேட்டை மக்கள்
ADDED : ஜூலை 02, 2025 11:54 PM

ஜாபர்கான்பேட்டை,
ஜாபர்கான்பேட்டையில், உயிர்பலி வாங்க காத்திருக்கும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பாழடைந்த குடியிருப்பு கட்டடத்தை, இடித்து புது கட்டடம் கட்டித்தர வேண்டும் என, அங்கு வசிப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோடம்பாக்கம் மண்டலம், 139வது வார்டு ஜாபர்கான்பேட்டை ஆர்.வி.நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 27 பிளாக்குகளில், 666 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் அனைத்தும், 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை.
அனைத்து கட்டடங்களிலும், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், மேல் தளங்களில் உள்ள வீடுகளின் கழிப்பறையில் இருந்து தண்ணீர், கீழ் தள வீடுகளில் கசிகிறது.
அதேபோல, 50 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட மின் ஒயர்கள் என்பதால், அடிக்கடி பழுதடைவதுடன் மின் கசிவும் ஏற்படுகிறது.
பாதாள சக்கடையில் அடைப்பு காரணமாக, கழிவுநீர் வீடுகளில் புகுந்து பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் அடிக்கடி மின் விபத்துகளும் ஏற்படுகின்றன.
தொடர் புகார்களை அடுத்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சில கட்டடங்களில், மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், ஆபத்தான நிலையில் உள்ள இந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த குடியிருப்பை இடித்து, புது குடியிருப்பு கட்ட வேண்டும் என, குடியிருப்பு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆபத்தை உணருமா அரசு?
சென்னையின் பிற பகுதிகளில், 25 ஆண்டுகளை கடந்த பல குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புது கட்டடம் கட்டப்பட்டுள்ளன; கட்டப்பட்டு வருகின்றன. ஆனால், வாழ தகுதியற்ற நிலையில் இருந்தும், ஜாபர்கான்பேட்டை குடியிருப்பை அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. விபரீதம் நடந்த பின், நடவடிக்கை மேற்கொண்டு எந்த பயனும் இருக்காது.
- குடியிருப்பு மக்கள், ஜாபர்கான்பேட்டை.