/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உணவு வினியோக ஊழியருக்கு கே.கே., நகரில் ஓய்வறை
/
உணவு வினியோக ஊழியருக்கு கே.கே., நகரில் ஓய்வறை
ADDED : ஜூலை 21, 2025 03:28 AM

சென்னை:ஆன்லைனில் உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வினியோகம் செய்யும் ஊழியர்களுக்கு, அண்ணா நகர், பாண்டி பஜார் பகுதியில், இரண்டு ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டதை தொடர்ந்து, வேளச்சேரி, கே.கே., நகரிலும் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள், உணவு பொருள் வினியோகம் செய்கின்றன. மேலும், மொபைல் போன், டிவி., உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை, அமேசான், பிலிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வினியோகிக்கின்றன.
இந்த நிறுவனங்களில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சென்னையில் பணிபுரிகின்றனர்.
நாள் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கும் அவர்களின் வசதிக்காக, அதிகமாக உணவு வினியோகமாகும் பகுதிகளில், 'ஏசி' ஓய்வு அறை அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டது.முதற்கட்டமாக, 25 லட்சம் ரூபாயில், அண்ணா நகரில் 'இணைய தொழிலாளர் கூடம்' என்ற பெயரில் அமைத்த ஓய்வு அறை, மே மாதம் திறக்கப்பட்டது. தொடர்ந்து, பாண்டி பஜாரில் அமைத்த ஓய்வு அறை, இரு தினங்களுக்கு முன் திறக்கப்பட்டது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
அண்ணா நகர், பாண்டி பஜாரில் அமைத்த ஓய்வு அறை, ஊழியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர்கள் ஊற்சாகத்துடன் பணி புரிகின்றனர். துரிதமாக வினியோகமும் நடக்கிறது.
அண்ணா நகர், பாண்டி பஜாரில் அமைத்ததை தொடர்ந்து, வேளச்சேரி, கே.கே., நகரிலும் அமைக்க உள்ளோம். இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. ஓரிரு மாதத்தில், தலா 25 லட்சம் ரூபாய் செலவில், இங்கும் ஓய்வு அறைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.