/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உணவகங்கள் நேரடியாக கொட்டும் கழிவு, மாவு கரைசலால்... சிக்கல்! மழைநீர், கழிவுநீர் கால்வாய் அடைப்பால் வெள்ள பாதிப்பு
/
உணவகங்கள் நேரடியாக கொட்டும் கழிவு, மாவு கரைசலால்... சிக்கல்! மழைநீர், கழிவுநீர் கால்வாய் அடைப்பால் வெள்ள பாதிப்பு
உணவகங்கள் நேரடியாக கொட்டும் கழிவு, மாவு கரைசலால்... சிக்கல்! மழைநீர், கழிவுநீர் கால்வாய் அடைப்பால் வெள்ள பாதிப்பு
உணவகங்கள் நேரடியாக கொட்டும் கழிவு, மாவு கரைசலால்... சிக்கல்! மழைநீர், கழிவுநீர் கால்வாய் அடைப்பால் வெள்ள பாதிப்பு
UPDATED : டிச 17, 2024 06:34 AM
ADDED : டிச 17, 2024 12:21 AM

உணவகங்களில் பஜ்ஜி, சிக்கன், மீன் பொரிக்க பயன்படுத்தும் மாவு, மீதமாகும் குழம்பு கழிவுகளை நேரடியாக கொட்டுவதால், மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள பாதிப்பும் தொடர்கிறது.
உணவகங்களின் அத்துமீறலை தடுக்க, அபராதம் விதிப்பு உள்ளிட்ட தடுப்பு அதிகாரம் இல்லாததால், இப்பிரச்னைக்கு தீர்வு எட்டுவதில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சிக்கல் நீடிப்பதாக, அதிகாரிகள் கூறினர்.
சென்னை குடிநீர் வாரியத்தில், 13.35 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. தினமும், 100 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில், 70 கோடி லிட்டர் கழிவுநீராக வெளியேறுகிறது.
இந்த கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கு வினியோகிக்கப்படுகிறது; கடலிலும் விடப்படுகிறது. இதற்காக 5,500 கி.மீ., நீளத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
சேம்பர் இல்லை
இந்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற, 1.35 லட்சம் இயந்திர நுழைவு வாயில்கள் உள்ளன. குழாயில் அடைப்பு ஏற்படாமல், நீரோட்டம் சீராக இருந்தால் தான், கழிவுநீர் பிரச்னை ஏற்படாது.
ஆனால், குடிநீர் வாரியத்தில், தினமும் கழிவுநீர் பிரச்னை என, 500க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின்றன. குழாய் அடைப்பை சரி செய்ய, 300க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் இருந்தும், பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிகம் சார்ந்த கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், விடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் என, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன.
இந்த கட்டடங்களில் இருந்து செல்லும் கழிவுநீர் குழாய், தெரு குழாயில் உள்ள இயந்திர நுழைவு வாயிலில் இணைக்கப்படும். கட்டடத்தில் இருந்து செல்லும் குழாயில், சேம்பர் என்ற வடிகட்டி அமைக்க வேண்டும்.
கழிவுநீருடன் வரும் திடக்கழிவுகள், வடிகட்டியில் தங்கி, கழிவுநீர் மட்டும் தெருக்குழாயில் சேரும். வடிகட்டியில் தங்கிய கசடுகளை, தினமும் இரவு வெளியேற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
ஆனால், 50 சதவீத வணிக கட்டடங்களில் சேம்பர் அமைக்கவில்லை; சேம்பர் அமைத்துள்ள, 40 சதவீத கட்டடங்களில் முறையான பராமரிப்பு இல்லை. மீதமுள்ள 10 சதவீத கட்டடங்களில், முறையாக பராமரிப்பதாக, குடிநீர் வாரியம், சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவருகிறது.
கசடுகளை தினமும் அற்றுவது கூடுதல் வேலை என கருதும் பல நிறுவனங்கள், சேம்பர் கட்டாமல், நேரடியாக குழாய் இணைப்பு அமைத்துள்ளன. இதனால், மீதியாகும் காய்கறி, இறைச்சி குழம்புகளை அப்படியே குழாயில் கொட்டிவிடுகின்றனர்.
தொற்று பாதிப்பு
பஜ்ஜி, சிக்கன், மீன் பொரிப்பு போன்ற துரித உணவு வகைகளுக்கு, மாவு வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் மீதமானால், அப்படியே கழுவி குழாயில் விடுகின்றனர்.
கெட்டி துண்டுகளாக கொட்டும் மாவு, குழாயில் உள்ள அடைப்புகளில் சேர்ந்து நாளடைவில் கெட்டியாகி, நிரந்தர அடைப்பாக மாறிவிடுகிறது.
இதனால், 30 அடி இடைவெளியில் உள்ள, இயந்திர நுழைவு வாயில் வழியாக பொங்கி வெளியேறும் கழிவுநீர், குடியிருப்பு வளாகங்கள், தெருக்களில் தேங்கி, தொற்று பாதிப்பு ஏற்படுத்துவதுடன், போக்குவரத்து நெரிசலுக்கும் வழிவகுக்கிறது.
அதேபோல், மழைநீர் வடிகாலில் உள்ள சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளில், 90 சதவீதம் வணிக நிறுவனங்களில் இருந்து விடப்படுகிறது.
டெங்கு, மலேரியா பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தண்ணீரை கையாள்வது, வடிகாலில் கழிவுநீரை விடுவது போன்ற சுகாதார பிரச்னை ஏற்படுத்தினால், மாநகராட்சி சுகாதாரத் துறையால் அபராதம் விதிக்கப்படும்.
ஆனால், குடிநீர் வாரியத்தில் அபராதம் விதிக்க வழிவகை இல்லாததால், கழிவுநீர் குழாய் இணைப்பு விதிமீறல் அதிகரித்துள்ளது.
வரி செலுத்தாவிட்டால், உடனே இணைப்பு துண்டிப்பு, சீல், ஜப்தி நடவடிக்கை எடுக்கும் வாரியம், சேம்பர் அமைக்காத, பராமரிக்காத கட்டட உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், தொற்று நோய் பாதிக்காமல், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் பொறுப்பு வாரியத்திற்கும் உள்ளது.
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண, சேம்பர் அமைக்காத, பராமரிக்காத கட்டட உரிமையாளர்கள் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
அதிகாரம் இல்லை
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
சேம்பர் முறையாக அமைக்காத வணிக நிறுவனங்களால், கழிவுநீர் பிரச்னை அதிகரிப்பது உண்மை தான். துார்வாரும்போது, துரித உணவு வகை கழிவுகளே அதிகம் வெளியேறுகின்றன.
விடுதிகளில் இருந்து, ஷாம்பு, பான்பராக் பாக்கெட் போன்ற பொருட்களை நேராக குழாயில் விடுவதால், அடைப்பு அதிகரிக்கிறது. அபராதம் விதிக்க எங்களுக்கு அதிகாரம் வழங்கவில்லை.
இணைப்பை துண்டித்தால், உடனே வட்ட செயலர்கள், கவுன்சிலர்கள் தலையிடுகின்றனர். இதனால், மாநகராட்சி உதவியை நாடுகிறோம். நிரந்தர தீர்வு காண, வாரிய மேலாண்மை இயக்குனர் தனி உத்தரவு பிறப்பித்தால், விடிவு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
--- நமது நிருபர் --