/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 கொலை உட்பட 30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுட்டுக்கொலை! போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் என்கவுன்டர்
/
3 கொலை உட்பட 30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுட்டுக்கொலை! போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் என்கவுன்டர்
3 கொலை உட்பட 30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுட்டுக்கொலை! போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் என்கவுன்டர்
3 கொலை உட்பட 30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுட்டுக்கொலை! போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் என்கவுன்டர்
UPDATED : மார் 17, 2026 10:19 AM
ADDED : மார் 17, 2026 05:31 AM

சென்னை: சென்னையில் மூன்று கொலை வழக்குகள் உட்பட 30 வழக்குகளில் பிரதான குற்றவாளியான 'தொப்பை' கணேசன் நேற்று போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். மாதவரத்தில் பதுங்கியிருந்தவரை பிடிக்க சென்ற போலீசாரில் இருவரை கத்தியால் வெட்டியதால், போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சென்னை, வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்தவர் கணேசன், 38; ரவுடி. இவர், 'டில்லி' கணேஷ், 'தொப்பை' கணேசன் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டவர்; திருமணம் ஆகாதவர்.
கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், சென்னை மாநகர போலீசில், 'ஏ - பிளஸ் கேட்டகரி' ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.
இவர் மீது, மூன்று கொலைகள், ஏழு கொலை முயற்சி, 14 கொள்ளை வழக்குகள் என, வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி., நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில், 30 வழக்குகள் உள்ளன.
திருட்டு கைவந்த கலை கடந்த ஜன., 30ம் தேதி, புழல் மஹாவீர் கார்டன் பகுதியைச் சேர்ந்த, ஜவுளி வர்த்தகர் விஜயகுமார், அவரது மனைவி வசந்தா உட்பட ஐந்து பேரை, வீடு புகுந்து கட்டிப் போட்டு, கத்தி முனையில் முகமூடி கொள்ளையர்கள், 50 லட்சம் ரூபாய், 25 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக, தனிப்படை போலீசார் விசாரித்து, எண்ணுார் பெரிய காசி கோவில் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராகுல், 28, உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இவர்கள் அளித்த வாக்குமூலத்தில், கொள்ளை சம்பவத்தின் மூளையாக, 'தொப்பை' கணேசன் செயல்பட்டது தெரியவந்தது. 'கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுவது கணேசனுக்கு கைவந்த கலை' என, போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஜவுளி வர்த்தகர் விஜயகுமாரின் குடும்பத்தினரை கட்டிப்போட்டு, நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில், கணேசனின் பெயர் சேர்க்கப்பட்டு, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னை மாதவரம் சின்ன ரவுண்டானா அருகே, கட்டுமான பணிகள் பாதியில் கைவிடப்பட்ட பழைய கட்டடத்தில், கணேசன் பதுங்கி இருப்பதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திரு.வி.க., நகர் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ், எஸ்.ஐ., சுப்ரமணி, 43, ஏட்டு தினேஷ்குமார், 37, ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார், நேற்று காலை கணேசனை சுற்றி வளைத்து, கைது செய்ய முயன்றனர்.
நெஞ்சில் பாய்ந்தது அப்போது, கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசாரை வெட்டினார். இதில், எஸ்.ஐ., சுப்ரமணி, ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் காயமடைந்தனர்.
தொடர்ந்து, இன்ஸ் பெக்டர் பூபதிராஜையும், கணேசன் வெட்ட முற்பட்டார். சுதாரித்த அவர், தற்காப்புக்காக சுட்டதில், மார்பில் மூன்று குண்டுகள் பாய்ந்த கணேசன், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.
உடனடியாக அவரை, அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்த்தனர். டாக்டர்களின் பரிசோதனையில் கணேசன் உயிரிழந்தது தெரிய வந்தது.
காயமடைந்த எஸ்.ஐ., மற்றும் ஏட்டு ஆகியோரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் நடத்திய என்கவுன்டரில் கணேசன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக, மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

