முதல்வரின் பெரம்பூர் தொகுதியை மேம்படுத்த ரூ.1,013 கோடி திட்டம்
முதல்வரின் பெரம்பூர் தொகுதியை மேம்படுத்த ரூ.1,013 கோடி திட்டம்
UPDATED : ஜூலை 14, 2026 07:54 PM
ADDED : ஜூலை 14, 2026 07:32 PM
சென்னை:முதல்வர் விஜயின் பெரம்பூர் தொகுதியை, 1,013 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பெரம்பூர் தொகுதியில் ஜூலை 13 ஆய்வு மேற்கொண்ட அவர், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, பெரம்பூர் தொகுதியில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
இந்த வகையில், பெரம்பூர் தொகுதியில் சாலை, குடிநீர், கழிவுநீர், குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, 1,013 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதில், குடியிருப்பு வசதிகளை மேம்படுத்த மட்டும், 553 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.
மேலும், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியான 3 கோடி ரூபாயில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பட்டியலை, மாநகராட்சி கமிஷனர் சமீரனிடம், முதல்வர் விஜய் வழங்கினார்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சமீரன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடசென்னை வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளவும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அறிவுறுத்தப்பட்ட பணிகளை விரைந்து தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
