/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மருத்துவமனை வரும் 9ல் திறப்பு: அமைச்சர் வேலு ஆய்வு
/
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மருத்துவமனை வரும் 9ல் திறப்பு: அமைச்சர் வேலு ஆய்வு
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மருத்துவமனை வரும் 9ல் திறப்பு: அமைச்சர் வேலு ஆய்வு
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மருத்துவமனை வரும் 9ல் திறப்பு: அமைச்சர் வேலு ஆய்வு
ADDED : ஆக 06, 2025 12:22 AM
குரோம்பேட்டை, தாம்பரம் சானடோரியத்தில், 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட மருத்துவமனையை, வரும் 9ம் தேதி முதல்வர் திறக்க உள்ள நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நேற்று ஆய்வு செய்தார்.
குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி இயங்கி வரும், அரசு தாலுகா மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக, 2021 அக்டோபரில் அரசு அனுமதி அளித்தது. மருத்துவமனை மேம்பாடுக்காக, 110 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.
இதற்காக, தாம்பரம் சானடோரியத்தில், சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகளுக்கு, 2023 பிப்ரவரியில், முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தற்போது, பணிகள் முடிந்து, கட்டடம் திறப்புக்கு தயாராக உள்ளது.
இம்மருத்துவமனை கட்டடத்தை, ஜூலை 23ல், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி, ராஜா மற்றும் மேயர் வசந்தகுமாரி உள்ளிட்டோர், உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி:
குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, தினமும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி, புதிய மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது.
மருத்துவமனை, 400 படுக்கை வசதி, ஆறு அறுவை சகிச்சை அரங்குகள் உள்ளன. சி.டி.,ஸ்கேன், குழந்தைகள் நலன், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை, பச்சிளம் குழந்தை பிரிவு, நீரிழிவு பிரிவு ஆகிய சிறப்பு வசதிகள் அமைய உள்ளன.
இந்த மருத்துவமனையை, முதல்வர் ஸ்டாலின், வரும் 9ம் தேதி காலை 10:00 மணிக்கு திறந்து வைக்க உள்ளார். முறையாக அனைத்து அனுமதிகளையும் பெற்றே இம்மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.