/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவத்தை நாறடிக்க ரூ.110 கோடி; அம்பத்துார் ஏரி கழிவுநீரை கலக்க வைக்க 'நவீன' திட்டம்
/
கூவத்தை நாறடிக்க ரூ.110 கோடி; அம்பத்துார் ஏரி கழிவுநீரை கலக்க வைக்க 'நவீன' திட்டம்
கூவத்தை நாறடிக்க ரூ.110 கோடி; அம்பத்துார் ஏரி கழிவுநீரை கலக்க வைக்க 'நவீன' திட்டம்
கூவத்தை நாறடிக்க ரூ.110 கோடி; அம்பத்துார் ஏரி கழிவுநீரை கலக்க வைக்க 'நவீன' திட்டம்
UPDATED : ஆக 26, 2025 10:53 AM
ADDED : ஆக 25, 2025 09:58 PM

சென்னை: கூவம் ஆற்றை மேலும் நாறடிக்கும் வகையில், அம்பத்துார் ஏரியில் தேங்கும் கழிவுநீரை கொண்டு செல்வதற்கு, 100 கோடி ரூபாய் செலவில் மூடுகால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நீர்நிலைகள் சீரமைப்பு என்ற பெயரில் சீரழிப்பு நடவடிக்கையில் நீர்வளத்துறையினர் இறங்கியுள்ளது, சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்துார் ஏரி, 40 ஆண்டுகளுக்கு முன், 650 ஏக்கராக இருந்தது. இந்த ஏரியை சுற்றி, எம்.கே.பி., நகர், சிவானந்தா நகர், சத்தியபுரம், நேரு நகர் என, பல்வேறு நகர்கள் உருவாகி உள்ளன. தற்போது, ஏரியின் பரப்பளவு, 350 ஏக்கராக சுருங்கியுள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அம்பத்துார் ஏரியை சென்னையின் குடிநீர் ஆதாரமாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக, 20 கோடி ரூபாய் செலவில் துார்வாரும் பணிகள் நடந்தன. இந்த ஏரியில், 0.23 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும்.
வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும் நீர் தான், இந்த ஏரியின் நீராதாரமாக இருந்தது. ஆனால், தற்போது குடியிருப்புகள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் திட மற்றும் திரவ கழிவுகள், இதில் தேங்கி கிடக்கின்றன. ஏரிக்கு வரும் கழிவுநீரை தடுப்பதற்கு, நீர்வளத்துறை எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
பருவமழை காலங்களில் அம்பத்துார் ஏரி நிரம்பும்போது, அதில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், கொரட்டூர் ஏரிக்கு சென்று, அங்கிருந்து ரெட்டேரியை அடையும். ரெட்டேரியை வைத்து, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
சில ஆண்டுகளாக, அம்பத்துார் ஏரியில் இருந்து கொரட்டூர் ஏரி வழியாக, ரெட்டேரிக்கு கழிவுநீர் அதிகம் செல்வது தெரியவந்துள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க வேண்டும் என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
அம்பத்துார் ஏரி கழிவுநீரை துார் வாரி, நீரை சுத்திகரித்து அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையெல்லாம் சாத்தியமில்லை என கருதிய நீர்வளத்துறை, தற்போது புதிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, அம்பத்துார் ஏரியில் இருந்து, 5 கி.மீ.,க்கு மூடுகால்வாய் அமைக்கப்பட உள்ளது. மதுரவாயல் எம்.ஜி.ஆர்., பல்கலை அருகே, இந்த கால்வாயை கூவம் ஆற்றில் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 110 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்ததாரர் தேர்வும் துவங்கியுள்ளது.
இதன் வாயிலாக, அம்பத்துார் ஏரியில் தேங்கும் கழிவுநீர் முழுதும், கூவம் ஆற்றிற்கு வெள்ள காலங்களில் திருப்பிவிடப்பட உள்ளது. கொரட்டூர் ஏரி வழியாக ரெட்டேரிக்கு கழிவுநீர் செல்வது தடுக்கப்பட உள்ளது என, நீர்வளத்துறையினர் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.
தெற்கு பகிங்ஹாம் கால்வாய் இணைப்பு கால்வாயுடன், இந்த கால்வாய் பணிக்கும் சேர்த்து, உத்தண்டியில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.
இந்த திட்டத்தை கேள்விப்பட்டு, சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஏரியை துார் வாரினால் மட்டுமே தீர்வு
அம்பத்துார் ஏரி முழுதும் கழிவுநீர் நிறைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து கூவத்திற்கு தண்ணீர் செல்ல, ஏற்கனவே கால்வாய் இருந்தது. ஆக்கிரமிப்புகளால் அது மாயமாகிவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாததால், இங்கிருந்து வெளியேறும் உபரி நீரை, சாலை வழியாக மூடுகால்வாய் அமைத்து, கூவத்தில் இணைக்க திட்டமிட்டுள்ளனர். அம்பத்துாரில் ஏரியில் இருந்து செல்லும் கழிவுநீர், கூவத்தில் தேங்கியுள்ள கழிவுநீரோடு சேர்ந்து வெளியேறவே இந்த திட்டம் வழிவகுக்கும்; அரசு நிதி வீணாகும். இதற்கு பதிலாக, அம்பத்துார் ஏரியை முழுமையாக துார்வாரி, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூவம் ஆறு மாசு அடைவதை தடுக்க வேண்டும். - திருநாவுக்கரசு, ஓய்வுபெற்ற உதவி செயற்பொறியாளர், நீர்வளத்துறை.