/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2 கோடி நிலமோசடி குற்றவாளிகள் சிக்கினர்
/
ரூ.2 கோடி நிலமோசடி குற்றவாளிகள் சிக்கினர்
ADDED : அக் 25, 2025 04:36 AM

சென்னை: போலி ஆவணம் தயாரித்து, 2 கோடி ரூபாய் நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
தி.நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 55. இவர், ஆகஸ்ட் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அதில், 'மடிப்பாக்கத்தில், 4,715 சதுரடியில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு காலி மனை உள்ளது.
' அவற்றை சிலர், போலி ஆவணம் தயாரித்தும் ஆள்மாறாட்டம் செய்தும் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலி ஆவண புலனாய்வு பிரிவு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், கே.கே.நகரைச் சேர்ந்த ராகேஷ், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் கூட்டாளிகளான வெங்கடேசன், பாலசுந்தர ஆறுமுகம், சாலமன்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து, புகார்தாரரின் தாய் பத்திரத்தை 'ஆன்லைன்' மூலம் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
அதேபோல போலி ஆவணம் தயார் செய்து, பிரியா என்பவர் மட்டுமே வாரிசு என போலி சான்று பெற்றுள்ளனர்.
இதையடுத்து, நிலத்தை கீழ்கட்டளையைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவரிடம், 1.55 கோடி பெற்றுக் கொண்டு, கிரையம் செய்து கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது.
அக்., 2ம் தேதி மோசடியில் ஈடுபட்ட பிரியா, பாலசுந்தர ஆறுமுகம், சாலமன்ராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளிகளான கே.கே.நகரைச் சேர்ந்த ராகேஷ், 36, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக், 54, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராகேஷ் மீது, இரண்டு கொலை வழக்குகள் உள்ளன.

