/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செம்பரம்பாக்கம் ஏரிக்கரை பலப்படுத்த...ரூ.22 கோடி!:கனமழையை எதிர்கொள்ள தயாராகிறது
/
செம்பரம்பாக்கம் ஏரிக்கரை பலப்படுத்த...ரூ.22 கோடி!:கனமழையை எதிர்கொள்ள தயாராகிறது
செம்பரம்பாக்கம் ஏரிக்கரை பலப்படுத்த...ரூ.22 கோடி!:கனமழையை எதிர்கொள்ள தயாராகிறது
செம்பரம்பாக்கம் ஏரிக்கரை பலப்படுத்த...ரூ.22 கோடி!:கனமழையை எதிர்கொள்ள தயாராகிறது
ADDED : நவ 11, 2024 01:43 AM

குன்றத்துார்:கடந்தாண்டு 'மிக்ஜாம்' புயல், மழை வெள்ளத்தில் சேதமான செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை, 22 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைத்து, பலப்படுத்தும் பணி துவங்க உள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 6,300 ஏக்கர் பரப்பில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.
ஏரி 3.645 டி.எம்.சி., கொள்ளளவும், நீர்மட்டம் 24 அடி ஆழமும், ஏரிக்கரை 8 கி.மீ., நீளமும் உடையது. ஏரியின் உபரி நீரை வெளியேற்ற 19 கண் மதகு மற்றும் ஐந்து கண் மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டு 'மிக்ஜாம்' புயலின்போது பெய்த கனமழையால், ஏரியின் 19 கண் மதகு அருகே, கரையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு சேதமாகியது. கரை அரிப்பை தடுக்க, மண் மூட்டைகள் அடுக்கி, கரை பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், ஏரிக்கரையின் தடுப்பு சுவர்கள், உள்ளே பதிக்கப்பட்ட கற்கள் ஆங்காங்கே பெயர்ந்துள்ளன.
அதனால், கன மழையை தாங்கும் வகையில் ஏரிக்கரையை பலப்படுத்துவதோடு, சரிந்த கற்களை அகற்றி கான்கிரீட் சுவர் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை 22 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டது. சீரமைப்பு பணிக்கு அரசு 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதை அடுத்து, நீர்வளத் துறை இப்பணிக்காக 'டெண்டர்' விட்டுள்ளது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் கரை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில், ஏரியையும் துார் வாரினால் கூடுதல் நீரை தேக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியாக இருந்தாலும், பாதுகாப்பு கருதி ஏரியின் நீர்மட்டம் 21 அடியை எட்டியதும், உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால், ஏரியில் அதிக நீரை தேக்கி வைக்கமுடிவில்லை.
குடியிருப்புகளின் பெருக்கத்தால், இந்த ஏரி நீரை பயன்படுத்தி நடந்த விவசாயம் 98 சதவீதம் நிறுத்தப்பட்டுவிட்டது.
எனவே, இந்த ஏரியை அதிக ஆழம் துார்வாரினால் தற்போது உள்ள கொள்ளளவைவிட, கூடுதலாக ஒரு டி.எம்.சி., நீரை தேக்கி வைக்க முடியும். எனவே, செம்பரம்பாக்கம் ஏரியை துார்வார, அரசு நவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'செம்பரம்பாக்கம் ஏரிக்கரை 22 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க 'டெண்டர்' விடப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் பணிகளை துவங்க உள்ளோம். ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஏரியை துார்வாருவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை' என்றார்.

