/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2,247 கோடி குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள்...முடக்கம்!:தி.மு.க., கவுன்சிலர்கள் முட்டுக்கட்டையால் அதிருப்தி
/
ரூ.2,247 கோடி குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள்...முடக்கம்!:தி.மு.க., கவுன்சிலர்கள் முட்டுக்கட்டையால் அதிருப்தி
ரூ.2,247 கோடி குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள்...முடக்கம்!:தி.மு.க., கவுன்சிலர்கள் முட்டுக்கட்டையால் அதிருப்தி
ரூ.2,247 கோடி குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள்...முடக்கம்!:தி.மு.க., கவுன்சிலர்கள் முட்டுக்கட்டையால் அதிருப்தி
ADDED : ஜூலை 01, 2024 01:47 AM

சென்னை விரிவாக்க மண்டலங்களில், 2,247 கோடி ரூபாயில் குடிநீர், கழிவுநீர் திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில், தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் இடையூறு செய்வதால், பல வார்டுகளில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி, கடந்த 2011ம் ஆண்டு வரை, 174 சதுர கி.மீ., பரப்பில், 155 வார்டுகள் அடங்கிய 10 மண்டலங்களாக இருந்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை இணைத்து, பெருநகர சென்னை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து 426 சதுர கி.மீ., பரப்பில், 200 வார்டுகள் உடைய 15 மண்டலங்களாக மாற்றப்பட்டது.
சென்னை அபார வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதில், சென்னை குடிநீர் வாரியத்தில், அதிகளவில் நிதி ஒதுக்கி, குடிநீர், கழிவுநீர் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படடு வருகின்றன.
தற்போது சென்னையில், 13.35 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. தினமும் 106 கோடி லிட்டர் குடிநீரை, வாரியம் வினியோகம் செய்கிறது. அதேபோல், 70 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றுகிறது.
குடிநீர், கழிவுநீர் வசதிகளை மேம்படுத்த, சென்னையில் 3,500 கோடி ரூபாயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், விரிவாக்கப் பகுதிகளில் இப்பணிகள் 2,247 கோடி ரூபாயில் துவக்கப்பட்டு உள்ளன.
இந்நிதியில் குழாய் பதிப்பு, கீழ்நிலை, மேல்நிலை குடிநீர் தொட்டிகள், கழிவு நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கண்காணிப்பு அலுவலகம் அமைக்க வேண்டும்.
குடிநீர் வாரியம் கைவசம் உள்ள இடங்களை தேர்வு செய்து, அதில் இத்திட்டப் பணிகள் துவக்கப்படுகின்றன. லோக்சபா தேர்தலுக்கு முன், முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக இப்பணிகளை துவக்கி வைத்தார்.
பணி துவங்கும் நேரத்தில் இதற்கு உடன்பட்ட சில கவுன்சிலர்கள் மற்றும் நலச்சங்கங்கள், தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், பல வார்டுகளில் பணி துவங்காமல், திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
விரிவாக்க மண்டலங்கள், முன்னர் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சியாக இருந்தன. அப்போது, அங்குள்ள குடிநீர், கழிவுநீர் கட்டமைப்பை, அந்தந்த நிர்வாகங்கள் கையாண்டன.
கடந்த 2011ல் மாநகராட்சியுடன் இணைத்தபோது சாலை, வடிகால், கட்டடம், தெருவிளக்கு உள்ளிட்ட கட்டமைப்புகள், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன.
குடிநீர் தொட்டிகள், கிணறு, ஆழ்துளை கிணறு, மோட்டார் அறை, கழிவுநீர் கட்டமைப்பு, நிர்வாக அலுவலகங்கள் உள்ளிட்டவை, குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், அவை சம்பந்தப்பட்ட துறை ரீதியான நில ஆவணங்கள் ஒப்படைக்கப்படவில்லை.
இதற்கு, அப்போதிருந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. நாளடைவில் அவற்றை, வாரியமும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வாரியத்திற்கு ஏற்பட்டது. இதையடுத்து, வாரியம் பராமரிக்கும் விரிவாக்க பகுதிகளில், புதிய திட்டத்திற்கான பணிகள் உடனடியாக துவக்கப்பட்டன. ஆனால், உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒப்படைக்காத பகுதிகளில், அப்பணிகளை துவக்கவிடாமல், அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் பிரச்னை செய்கின்றனர்.
இதற்கு காரணம், வாரியத்திடம் ஒப்படைக்காத பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகம் சார்பாக பூங்கா, உடற்பயிற்சி கூடம் கட்டினால், அவர்களுக்கு 'தேவையானது' கிடைக்கும் என்பதால், அவ்வாறு இடையூறு செய்கின்றனர்.
குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகளுக்கு தி.மு.க., கவுன்சிலர்கள் நேரடியாகவும், சில நலச்சங்க நிர்வாகிகள், மக்களை துாண்டிவிட்டும் முட்டுக்கட்டை போடுகின்றனர்.
இதனால், திட்டப் பணிகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் குடிநீர், கழிவுநீர் இணைப்பு கிடைக்கும் என ஏங்கும் மக்களுக்கு, இதனால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
எங்கள் கைவசம் உள்ள இடத்தில் தான், வரைபடம் தயாரித்து திட்டப் பணிகளை துவங்கி உள்ளோம். முதல்வர் பணியை துவக்கி வைத்தபோது உடனிருந்த கவுன்சிலர்கள் இப்போது எதிர்க்கின்றனர்.
இன்னும் சிலர், மக்களை துாண்டிவிட்டு, பின்னால் இருந்து இயக்குகின்றனர். பிரச்னையை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டோம். துறை அமைச்சர், முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர் -