/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு தாமதமானதால் ரூ.5 லட்சம் இழப்பீடு
/
வீடு தாமதமானதால் ரூ.5 லட்சம் இழப்பீடு
ADDED : நவ 30, 2024 12:26 AM
சென்னை,
பழைய மாமல்லபுரம் சாலை, தையூரில் 'அக் ஷயா' நிறுவனம் சார்பில் 'அக் ஷயா டுடே' என்ற பெயரில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் வீடு வாங்க அரங்கநாதன் என்பவர், 2012ல் ஒப்பந்தம் செய்தார். இதற்காக அவர், 33.12 லட்சம் ரூபாயை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தப்படி, 2016ல் வீட்டை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் உறுதி அளித்திருந்தது.
ஆனால், குறிப்பிட்ட அவகாசத்தில் அந்நிறுவனம் பணிகளை முடித்து, வீட்டை ஒப்படைக்கவில்லை.
இது குறித்து அரங்கநாதன், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தார். இப்புகாரை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் என்.உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
கடந்த, 2016ல் வீட்டை ஒப்படைப்பதாக கூறிய நிறுவனம், குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடிக்கவில்லை. பின், 2017ல் ஒப்படைப்பதாக அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால், மனுதாரர் இழப்பீடு பெற தகுதி உடையவராகிறார். எனவே, வீட்டை தாமதமாக ஒப்படைத்த நிறுவனம், மனுதாரருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், 50,000 ரூபாய் வழக்கு செலவுக்காகவும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.