/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.56 கோடி ஒரத்துார் நீர்த்தேக்க பணி 2 ஆண்டாக... கிடப்பில்! நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம்
/
ரூ.56 கோடி ஒரத்துார் நீர்த்தேக்க பணி 2 ஆண்டாக... கிடப்பில்! நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம்
ரூ.56 கோடி ஒரத்துார் நீர்த்தேக்க பணி 2 ஆண்டாக... கிடப்பில்! நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம்
ரூ.56 கோடி ஒரத்துார் நீர்த்தேக்க பணி 2 ஆண்டாக... கிடப்பில்! நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : நவ 21, 2024 11:43 PM

குன்றத்துார் :சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படும் வகையில், தாம்பரம் அடுத்த ஒரத்துாரில், 56 கோடி ரூபாயில், 1 டி.எம்.சி., நீரை சேமிக்கும் வகையில் துவக்கப்பட்ட புதிய நீர்த்தேக்க பணிகள், இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நீர்த்தேக்கம் செயல்பாட்டுக்கு வந்தால், உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி, சென்னை மக்களின் தாகம் தீர்க்கவும் பெரிதும் உதவும்.
தாம்பரம், படப்பை அடுத்த ஒரத்துாரில், அடையாறு கிளை கால்வாய் துவங்குகிறது. இந்த கால்வாயின் இருபுறமும் ஒரத்துார் ஏரி, ஆரம்பாக்கம் ஏரி ஆகியவை அமைந்து உள்ளன.
மழைக்காலத்தில் இந்த கால்வாய் வழியே அதிக வெள்ள நீர் சென்று, வரதராஜபுரத்தில் உள்ள அடையாறு கால்வாயில் இணைவதால், வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
வெள்ள பாதிப்பை தடுக்கவும், சென்னையின் எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், ஒரத்துார் ஏரி, ஆரம்பாக்கம் ஏரிகளை, அடையாறு கிளை கால்வாயுடன் இணைத்து, 1 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், புதிய நீர்த்தேக்கம் அமைக்க, நீர்வளத்துறை திட்டமிட்டது.
இதையடுத்து, நிரந்தர வெள்ள தடுப்பு பணியின் கீழ், அ.தி.மு.க., ஆட்சியில் 2019ல், 56 கோடி ரூபாய் மதிப்பில், நீர்த்தேக்க கட்டுமான பணிகள் துவங்கின. கரை அமைத்தல், கற்கள் பதித்தல், மதகு அமைத்தல் என, நீர்த்தேக்கத்தின் கட்டுமான பணிகள், மூன்று ஆண்டுகளுக்கு முன், 80 சதவீதம் முடிந்தன.
நீர்த்தேக்கத்தையும், ஒரத்துார் ஏரியையும் இணைக்கும் 1,378 அடியுள்ள கரை அமையும் இடத்தில், 84 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது. இந்த நிலம் இன்னும் கையகப்படுத்தப்படாததால், நீர்த்தேக்க கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன.
இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தின் கரையில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, புதர் மண்டி பாழாகி வருகிறது.
மேலும், கரை அமைக்காத, 1,378 அடி பகுதியில், பருவ மழைக்காலத்தில் வெள்ளநீர் வெளியேறுவதை தடுக்க, நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியின் உள்ளேயே தற்காலிக கரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த தற்காலிக கரைகள், இரு ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழையின்போது உடைந்து, ஒரத்துாரில் உள்ள, 300 ஏக்கர் விவசாய நிலங்களிலும், வரதராஜபுரத்திலும் வெள்ள நீர் சூழ்கிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தாம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, அருகே உள்ள சென்னை மக்களின் குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, புதிய நீர் தேக்கங்கள் அவசியம். கோடைக் காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க, அரசு திக்குமுக்காடுகிறது. எனவே, ஒரத்துார் நீர்த்தேக்க கட்டுமான பணிகளுக்கு உள்ள இடையூறுகளை நீக்கி, விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். உள்ளூர் மக்களின் குடிநீர் தேவை, விவசாயிகளின் சாகுபடிக்கான நீர் தேவை பூர்த்தியாகும்.
தவிர, சென்னை மக்களின் தாகம் தீர்க்கவும் பெரிதும் உதவிகரமாக அமையும். எனவே, அரசு இந்த திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வழக்கால் பணிகள் தாமதம்
ஒரத்துார் நீர்த்தேக்கத்தின் 1,378 அடி கரை அமைக்க, 84 ஏக்கர் பட்டா நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டும். நஞ்சை நிலமான இவற்றுக்கு மாற்றாக, ஒரத்துார் அருகே கொருக்கன்தாங்கலில் மேய்க்கால் நிலம் வழங்க, நிலம் தேர்வு செய்யப்பட்டது.
நஞ்சை நிலத்திற்கு மாற்றாக, மேய்க்கால் நிலத்தை வழங்கக் கூடாது என, கொருக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வழக்குகளை விரைந்து முடித்து, எஞ்சியுள்ள நீர்த்தேக்கம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்போம். இந்தாண்டு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், நீர்த்தேக்கத்தின் தற்காலிக கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
-- நீர்வளத்துறை அதிகாரி