/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாதாரண பேருந்தில் ரூ.5,000; 'ஏசி'யில் ரூ.10,000 வசூல்... கட்டாயம் எம்.டி.சி., கெடுபிடி உத்தரவால் தொழிலாளர்கள் அதிருப்தி
/
சாதாரண பேருந்தில் ரூ.5,000; 'ஏசி'யில் ரூ.10,000 வசூல்... கட்டாயம் எம்.டி.சி., கெடுபிடி உத்தரவால் தொழிலாளர்கள் அதிருப்தி
சாதாரண பேருந்தில் ரூ.5,000; 'ஏசி'யில் ரூ.10,000 வசூல்... கட்டாயம் எம்.டி.சி., கெடுபிடி உத்தரவால் தொழிலாளர்கள் அதிருப்தி
சாதாரண பேருந்தில் ரூ.5,000; 'ஏசி'யில் ரூ.10,000 வசூல்... கட்டாயம் எம்.டி.சி., கெடுபிடி உத்தரவால் தொழிலாளர்கள் அதிருப்தி
ADDED : ஏப் 03, 2025 11:41 PM

சென்னை : பேருந்துகளின் வகைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு '�ப்ட்'டுக்கும் இவ்வளவு தொகையை கட்டாயம் வசூலிக்க வேண்டும் என, சென்னை போக்குவரத்து கழகம் இலக்கு நிர்ணயம் செய்து, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளதால், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 650 வழித்தடங்களில் தினமும், 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில், 32 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
சென்னையின் எல்லைப் பகுதி நாளுக்குள் அதிகரித்து வருவதால், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருவள்ளூர், குன்றத்துார் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கும், மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் சில வழித்தடங்களில், பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக, பயணியர் புலம்புகின்றனர். இதை கருத்தில் வைத்து, பல்வேறு மாற்றங்களை, மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பேருந்துகளின் வகை மற்றும் வழித்தடத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு பேருந்துக்கும் வசூல் தொகையை, எம்.டி.சி., நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது.
அனைத்து கிளை மேலாளர்களுக்கும், மாநகர போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சென்னை மற்றும் புறநகரில் தினமும், 3,233 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், பேருந்துகளின் எரிபொருள் செலவு மற்றும் பணியாளர் சம்பளத்திற்கான தொகையைக்கூட ஈட்ட இயலவில்லை.
இதனால், டீசல் கொள்முதல், பணியாளர்களின் சம்பளம் மற்றும் பிற பணப் பலன்கள் வழங்குவதில், பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, ஒவ்வொரு பணிமனையிலும் பேருந்து இயக்க துாரம், வருவாய் ஆகியவற்றை கணக்கீடு செய்து, வருவாய் இலக்கு நிர்ணயித்து பணியாற்ற வேண்டும். இதனால், அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள், ஒவ்வொரு பணிமனையிலும், பேருந்து இயக்கம் மற்றும் டிக்கெட் வருவாய் பெருக்கத்தில் தனிக்கவனம் செலுத்த வேணடும்.
அதேபோல், அனைத்து வழித்தடங்களிலும் பேருந்து இயக்கத்தை, 100 சதவீதம் உறுதிப்படுத்துவதுடன், டிக்கெட் வருவாயையும் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை செயலர் காமராஜ் கூறியதாவது:
மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம், மாணவர்கள் உட்பட 50 வகையான பாஸ்கள், தற்போது பயன்பாட்டில் உள்ளன. அதுபோல், 1,000 ரூபாய் பாஸ் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.
இதனால், நடத்துநர் வழியேயான நேரடி வருவாய் குறைந்துள்ளது. இந்நிலையில், வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்திருப்பது, ஓட்டுநர், நடத்துநருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இலவச பாஸ்களுக்கான மானியத் தொகையை, தமிழக அரசிடம் இருந்து வாங்க, போக்குவரத்து கழகங்கள் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'வருவாயை பெருக்கும் நோக்கில், அனைத்து பேருந்துகளையும் இயக்கவும், வசூலை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வருவாய் இலக்கிற்காக யாரையும் கட்டாயப்படுத்தவில்லை' என்றனர்.