/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிற்றுண்டி திட்டத்தில் குழைந்த உப்புமா
/
சிற்றுண்டி திட்டத்தில் குழைந்த உப்புமா
ADDED : பிப் 15, 2024 12:13 AM

சென்னை,சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்பட்ட காலை சிற்றுண்டியில், உணவு தரமற்றவையாக இருந்ததால், மாணவர்கள் சாப்பிட மறுத்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் சத்துணவு குறைபாடை போக்கவும், அவர்கள் காலை உணவு உட்கொள்ளும் வகையில், 'காலை சிற்றுண்டி திட்டம்' துவக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் மட்டும் 65,000 மாணவர்கள், காலை சிற்றுண்டி திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, 35 இடங்களில் ஒருங்கிணைந்த சமையற்கூடம் வாயிலாக உணவு தயாரிக்கப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு வாகனங்கள் வாயிலாக எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம், சோள உப்புமா, காலை சிற்றுண்டியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த உணவு சரியாக வேக வைக்கப்படாமல் இருந்ததால், அவற்றை மாணவர்கள் சாப்பிட முடியாமல் திருப்பி அளித்துள்ளனர்.
அந்தவகையில், பெரும்பாலான இடங்களில் சமைக்கப்பட்ட உணவுகள் திருப்பி அளிக்கப்பட்ட நிலையில், அந்தந்த பகுதி கவுன்சிலர்கள், தங்களது சொந்த செலவில் மாணவர்களுக்கு வெளியில் இருந்து உணவு வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'இதற்குமுன், சோள உப்புமாவுக்கு, சோளம் அரைக்கப்படாமல் வழங்கப்பட்டது. தற்போது, சோளத்தை அரைத்து வழங்குகின்றனர்.
'இதனால், சில இடங்களில் உப்புமா சாப்பிட முடியாத அளவுக்கு குழைந்து இருந்துள்ளது. அவற்றை மாணவர்கள் சாப்பிட மறுத்ததால், கவுன்சிலர்கள் தங்களது செலவில் உணவு வாங்கிக் கொடுத்தனர்' என்றனர்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியதாவது:
ஒருங்கிணைந்த சமையற்கூடங்களில் இருந்து தயாரித்து, கன்டெய்னரில் எடுத்து செல்லும் உணவு, சில இடங்களில் சாப்பிட முடியாத நிலையில், குழைந்துள்ளது.
இதுகுறித்து தகவல் வந்தவுடன் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தரமான உணவு வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தினசரி வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
என் மகள் படிக்கும் பள்ளியில் கொடுக்கும் இட்லி, உப்புமா, கிச்சடி உள்ளிட்ட காலை உணவுகள் தரமாக உள்ளன. பெற்றோர் - ஆசிரியர் கழகத்தில் நான் உறுப்பினராக உள்ளதால், சில நேரங்களில் நானும் அந்த உணவை சாப்பிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ருசி பார்த்த பின்தான் மாணவ - மாணவியருக்கு உணவு பரிமாறப்படுகின்றது. காலை உணவு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களால் உணவு தயார் செய்யப்படுகின்றது. இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை.
- சித்ரா, 32, பட்டாபிராம்.
என் மகள் மாநகராட்சி பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். குறித்த நேரத்தில் காலை உணவு வழங்குவதில்லை என, கூறினார். இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது, மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச கூறினர். சுகாதார அதிகாரிகளிடம் கூறினால், முறையான பதில் தருவதில்லை. பள்ளி குழந்தைகளுக்கு காலை ஊட்டச்சத்து உணவு அளிப்பது நல்ல திட்டம். சில அதிகாரிகளால், தரம் குறைந்து வருகிறது. சுகாதார குறைபாடு உள்ளதால், சமையல் கூடத்தை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
---எச்.லட்சுமி, 32, திருவான்மியூர்
குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் துவங்கப்பட்ட ஒரு வாரம் வரை, சுவையான உணவை வழங்கினர். பின்னர், சிற்றுண்டியின் தரம் குறைந்து விட்டது. நொய் அரிசி உப்புமா கொழகொழவென சாப்பிட முடியாத நிலையில் உள்ளது. குழந்தைகள் சிறிதளவு சாப்பிட்டு விட்டு குப்பையில் கொட்டி விடுகின்றனர். தற்போது வழங்கப்படும் சோள உப்புமா, கோதுமை ரவை உப்புமா, நெய் அரிசி உப்புமா ஆகியவற்றை நிறுத்திவிட்டு, குழந்தைகளுக்கு இரண்டு இட்லி கொடுத்தால் கூட, பசி தாங்கும்.
- வி.தேவி, 32, தண்டையார்பேட்டை
காலை உணவு திட்டத்தில், பொங்கல், ரவை உப்புமா, சாம்பார் மட்டுமே மாணவர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். சேமியா கிச்சடி போன்ற உணவுகள் மிகவும் குழைந்து விடுவதால் குழந்தைகள் விரும்புவதில்லை. இதுபோன்ற உணவுகளை ஒரே நேரத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தயாரிக்கும்போது உணவு குழைந்து போக அதிக வாய்ப்புள்ளது. அந்தந்த பள்ளிகளில் உள்ள சத்துணவு பணியாளர்களிடம் ஒப்படைத்தால் உணவின் ருசி இன்னும் தரமாக இருக்கும்.
- எச்.ஜோதி ஹரிகிருஷ்ணன், 30, சூளைமேடு

