/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சானடோரியம், குரோம்பேட்டையில் 5 மாதமாக இயங்காத எஸ்கலேட்டர் வரும் 18ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
/
சானடோரியம், குரோம்பேட்டையில் 5 மாதமாக இயங்காத எஸ்கலேட்டர் வரும் 18ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
சானடோரியம், குரோம்பேட்டையில் 5 மாதமாக இயங்காத எஸ்கலேட்டர் வரும் 18ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
சானடோரியம், குரோம்பேட்டையில் 5 மாதமாக இயங்காத எஸ்கலேட்டர் வரும் 18ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
ADDED : ஏப் 15, 2025 12:25 AM
தாம்பரம், தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்களில், லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.
இவர்களில், 30 சதவீதம் பேர், அந்தந்த நிறுவன பேருந்துகளிலும், மற்றவர்கள் ரயில் மற்றும் பேருந்துகள் வாயிலாகவும் பணிக்கு வந்து செல்கின்றனர்.
இதனால், அந்த சிக்னலில், 'பீக் ஹவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இந்த சிக்னலில், ஜி.எஸ்.டி., சாலையின் இடதுபுறத்தில் சாய்தள நடைபாதை, நகரும் படிக்கட்டு, வலது புறத்தில் நகரும் படி மற்றும் சாதாரண படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், குரோம்பேட்டையிலும், சாலையின் இருபுறத்திலும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்விரு இடங்களிலும் தானியங்கி படிக்கட்டு அமைக்கப்பட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.
இதனால், அவை பழுதாவதும், பின் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு இயங்குவதும் என்பது, தொடர் கதையாகிவிட்டது. தற்போது, ஐந்து மாதங்களுக்கு மேலாக இயங்கவே இல்லை.
இதனால், முதியோர், கர்ப்பிணியர், மாற்றுத் திறனாளிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அதனால், நகரும் படிக்கட்டு பராமரிப்பு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நகரும் படிக்கட்டு, 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே இயங்கும். தற்போது, பழுதாவதும் பின் அதை சரிசெய்வதும் தொடர்கிறது. அது மட்டுமின்றி, அடிக்கடி பழுது நீக்குவதால் பணம் தான் வீணாகும்.
சானடோரியம், குரோம்பேட்டை நகரும் படிக்கட்டுகளை பொறுத்தவரை, ஒரு எஸ்கலேட்டரை சரிசெய்ய, சம்பந்தப்பட்ட நிறுவனம், 20 லட்சம் ரூபாய் கேட்கிறது.
அப்படியே சரிசெய்தாலும், 5 - 10 ஆண்டுகள் ஓடினால் செலவு செய்தது ஈடாகும். ஆனால், மீண்டும் பழுதாக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், புதிய எஸ்கலேட்டர் அமைக்க, 65 - 70லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
மேலும், அவை 10 ஆண்டுகளுக்கு மேல் பாதிப்பின்றி ஓடும். அதனால், தேவையில்லாமல் செலவு செய்ய, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முன்வரவில்லை.
அதனால், இந்த இரண்டு இடங்களிலும், புதிய நகரும் படிக்கட்டு அமைக்க முடிவு செய்து, அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர்.
அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், பழைய படிக்கட்டுகள் அகற்றப்பட்டு, புதிய நகரும் படிக்கெட்டு அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட்கும் போதெல்லாம் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும் என்றே கூறுகின்றனர். 6 மாதமாக எஸ்கலேட்டர் இயங்கவில்லை. சில மாதங்களுக்கு முன் கேட்டபோது, பிப்ரவரி மாதத்தில் இயங்கும் என்றனர். உண்மையான காரணத்தை மக்களுக்கு தெரிவிக்காதது ஏன்? இந்த அலட்சியத்தை கண்டித்து, வரும் 18ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
- வி.சந்தானம், 87,
சமூக ஆர்வலர், குரோம்பேட்டை.
தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை ஆகிய இரண்டு இடங்களிலும் இயங்காத எஸ்கலேட்டரை சரிசெய்ய, 20 லட்சம் ரூபாய் செலவாகும் என, தனியார் நிறுவனம் கூறியுள்ளது. அதே நேரத்தில், புதிய எஸ்கலேட்டரின் மதிப்பு, 65 - 70 லட்சம் ரூபாய் தான். அதனால், புதிய எஸ்கலேட்டர் அமைக்க முடிவு செய்து, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும்.
- நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்