/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்டாலின் கடிதத்துடன் வீடு வீடாக செல்லும் துாய்மை பணியாளர்கள்
/
ஸ்டாலின் கடிதத்துடன் வீடு வீடாக செல்லும் துாய்மை பணியாளர்கள்
ஸ்டாலின் கடிதத்துடன் வீடு வீடாக செல்லும் துாய்மை பணியாளர்கள்
ஸ்டாலின் கடிதத்துடன் வீடு வீடாக செல்லும் துாய்மை பணியாளர்கள்
ADDED : நவ 22, 2025 04:02 AM
சென்னை: அம்பத்துாரில் வீடு வீடாக சென்ற துாய்மை பணியாளர்கள், எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என எழுதிய கடிதத்தை காண்பித்து, அவர்தான் எங்களை வேலையை விட்டு நீக்கிவிட்டார் என முறையிட்டனர்.
ராயபுரம், திரு.வி.நகர் மண்டலங்களில் துாய்மை பணியை தனியார் நிறுவனத்திடம், சென்னை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இதற்கு, அந்த மண்டலங்களில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றிய துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தங்களுக்கு, பழைய படியே மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணி வழங்கக்கோரி, துாய்மை பணியாளர்கள் நான்கு பேர், அம்பத்துாரில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அம்பத்துார் பகுதியில் நேற்று வீடு வீடாக சென்ற துாய்மை பணியாளர்கள், 2021 ஜன., 19ல், எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின், 'துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, எழுதிய கடிதத்தை காண்பித்து, தற்போது பணி வழங்க மறுக்கிறார் என, முறையிட்டனர்.
இதுகுறித்து, துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:
கடந்த 114 நாட்களுக்கு மேலாக, வேலையின்றி அவதிப்பட்டு வருகிறோம். எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்காகவே அவருக்கு ஓட்டளித்தோம்.
முதல்வரானதும், எங்களை பணியில் இருந்து நீக்கியுள்ளார். எங்களுக்கு பழையபடி பணி வழங்கும் வரை போராட்டம் தொடரும். கொளத்துார் மற்றும் துறைமுகம் தொகுதி மக்களிடமும், இன்று முறையிட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

