/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
/
துாய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
ADDED : டிச 09, 2025 05:17 AM
சென்னை: மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, அம்பத்துாரில் துாய்மை பணியாளர்கள் மூன்று நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், 12 மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக தண்டையார்பேட்டை, அண்ணா நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க மாநகராட்சி டெண்டர் கோரியது.
இந்த டெண்டரில், 4,000 கோடி ரூபாய் வரை மு றைகேடு நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அந்த டெண்டரை மாநகராட்சி ரத்து செய்தது. இந்நிலையில், மாநகராட்சி நேரடியாக குப்பை கையாளும் மண்டலங்களில் துாய்மை பணியாளர்கள் சீருடை அணிய வேண்டும். வருகை பதிவேட்டில் முறையாக கையெழுத்திட வேண்டும் என, மாநகராட்சி தெரிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பத்துார் மண்டலத்தில், மூன்று நாட்களுக்கும் மேலாக பணிக்கு வராமல் துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
சீருடை அணிந்து பணிக்கு வருவோரை, சங்கம் என்ற பெயரில் சிலர் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பணிக்கு வருவோரை தடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் சீனிவாசன், மண்டல உதவி ஆணையர் பிரபாகரன் ஆகியோர், துாய்மை பணி யாளர்களுடன் நேற்று சமரச பேச்சில் ஈடுபட்டனர். அப்போது, சீருடை அணிதல் உள்ளிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தளர்வு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதையேற்ற துாய்மை பணியாளர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இன்று முதல் பணிக்கு திரும்புவதாகவும் அறிவித்துள்ளனர்.

