/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்வரங்களால் அரங்கை நிறைத்த சஞ்சய் சுப்பிரமணியம்
/
ஸ்வரங்களால் அரங்கை நிறைத்த சஞ்சய் சுப்பிரமணியம்
ADDED : ஜன 01, 2025 12:56 AM
சூரிய பகவானை வணங்கும் விதமாக, 'சூரியமூர்தே' என்ற நவக்கிரக கீர்த்தனையை பாடி, மயிலை தேசிக வித்யா பவனில், தனது கச்சேரியை துவங்கினார் சஞ்சய் சுப்பிரமணியம். சவுராஷ்ட்ரம் ராகத்தில், சதுஸ்ர துருவ தாளத்தில், ராக முத்திரையோடு அமையப்பெற்ற இக்கிருதியை, அவர் தன் கற்பனை ஸ்வரங்களால் அழகாக்கினார்.
பின், சாலக பைரவி ராகத்தில், ஆதி தாளத்தில் அமைந்த, 'பதவி நீ ஸத் பக்தியு' எனும் தியாகராஜரின் கீர்த்தனையை, கற்பனை ஸ்வரங்களுடன் பாடினார்.
முத்துசுவாமி தீட்சிதர் பள்ளிப்படி, பூஷாவதி என்று அழைக்கப்படும் ராகமான வச்சஸ்பதி-யில் ஆலப்பனை வழங்க, தனது வயலின் இசையை பக்கபலமாக இருக்க செய்தார் ஞானதேவ் பப்பு.
'கண்ட ஜூடுமீ ஒக பாரி க்ரே' என்ற தியாகராஜரின் கிருதியை, நிரவல் மற்றும் கற்பனை ஸ்வரங்களுடன் கோர்வைகள் பாடி, சபையினரிடமிருந்து கைத்தட்டுக்களை அள்ளினார்.
'சேதுலார சிங்காரமு' என்ற தியாகராஜரின் ஆதிதாள கிருதியை, ராக ஆலப்பனை, கற்பனை ஸ்வரங்கள், குறைப்பு மற்றும் கோர்வைகளுடன் சிறப்பாக வழங்கினார்.
பின், எம்.எஸ்.வெங்கட சுப்பிரமணியனின் மிருதங்கமும், எஸ்.சங்கரின் கஞ்சிராவும் தனி ஆவர்த்தனம் செய்து சபையை நிறைத்தன. இறுதியில், கமாஸ் ராகத்தில் ஜாவளி பாடி, தன் இசை பிரவாகத்தை நிறைவு செய்தார்.