/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மது பாட்டில் விற்பனைக்கு 'ஸ்கேன்' முறை அமல் * கூடுதல் விலை கேட்டு ஊழியர்கள் 'அடம்'
/
மது பாட்டில் விற்பனைக்கு 'ஸ்கேன்' முறை அமல் * கூடுதல் விலை கேட்டு ஊழியர்கள் 'அடம்'
மது பாட்டில் விற்பனைக்கு 'ஸ்கேன்' முறை அமல் * கூடுதல் விலை கேட்டு ஊழியர்கள் 'அடம்'
மது பாட்டில் விற்பனைக்கு 'ஸ்கேன்' முறை அமல் * கூடுதல் விலை கேட்டு ஊழியர்கள் 'அடம்'
ADDED : நவ 16, 2024 12:32 AM

சென்னை,
சென்னை மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டில், 210 'டாஸ்மாக்' கடைகளில், மது பாட்டிலை, 'ஸ்கேன்' செய்து விற்கும் கணினிமய திட்டம், நேற்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், கூடுதல் விலை வைத்து விற்பது குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில இடங்களில், கூடுதலாக, 10 ரூபாய் கேட்டு ஊழியர்கள் அடம் பிடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 4,830 கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. இந்த கடைகளில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது.
அரசு நிர்ணயம் செய்திருப்பதைவிட கூடுதல் விலைக்கு விற்பது, சில மது வகைகளுக்கு முன்னுரிமை அளித்து விற்பது, விற்பனையை குறைத்து காட்டுவது உள்ளிட்ட முறைகேடுகள் நடக்கின்றன.
இதை தடுக்க, கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்புவது முதல், 'குடி'மகன்களிடம் விற்பது வரை, மது விற்பனையை முழு கணினிமயமாக்கும் திட்டத்தை டாஸ்மாக் செயல்படுத்துகிறது. இந்த பணிக்கான ஒப்பந்த ஆணை, மத்திய அரசின், 'ரெயில்டெல்' நிறுவனத்திடம், 2023 ஜூனில் வழங்கப்பட்டது. திட்ட செலவு, 294 கோடி ரூபாய்.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து கடைகளிலும், 'பார்கோடு ரீடர்' கருவிகள் வழங்கப்படும். அதில், மது பாட்டிலை, 'ஸ்கேன்' செய்து விற்க வேண்டும். இதன் வாயிலாக கடைகளில் நடக்கும் விற்பனை விபரங்களை அதிகாரிகள் எங்கிருந்தபடியும், தொலைதொடர்பு வசதியுடன் கண்டறிய முடியும்.
முதற்கட்டமாக சோதனை முயற்சியாக, ராமநாதபுரத்தில், 110 மது கடைகளிலும், அரக்கோணத்தில், 88 கடைகளிலும், பிரின்டருடன் கூடிய ஸ்கேனர் கருவிகள் கடந்த மாதம் வழங்கப்பட்டன.
அதன்படி, கையடக்க ஸ்கேனர் கருவியில், மது பாட்டில் மேல் உள்ள, 'க்யூ.ஆர்.,' குறியீட்டை ஸ்கேன் செய்ததும், பாட்டில் வகை, விலை உள்ளிட்ட விபரங்கள் கருவியில் பதிவாகிவிடும். அதிலிருந்து பிரிண்ட் கொடுத்ததும், ரசீது வரும். அதை, மது பிரியர்களிடம் வழங்க வேண்டும்.
இதன் வாயிலாக, கடையில் தினமும் நடந்த விற்பனை எவ்வளவு, என்னென்ன மது வகைகள் விற்கப்பட்டன என்பதை துல்லியமாக அறிய முடியும். கூடுதல் விலைக்கு மது விற்பதும் தடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
நேற்று, சென்னை மண்டலத்தில், சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, 210 கடைகளில் மது பாட்டிலை, 'ஸ்கேன்' செய்து விற்கும் கணினிமய திட்டம், நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தொடர்ந்து, திருப்பூர், கரூர், சிவகங்கை, திருச்சியில் உள்ள மது கடைகளில், அடுத்த வாரம் கருவிகள் வழங்கப்பட உள்ளன. தமிழகம் முழுதும் டிசம்பருக்குள் அமல்படுத்தப்பட உள்ளது.