/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா போதையில் மூவரை வெட்டிய பள்ளி மாணவன்
/
கஞ்சா போதையில் மூவரை வெட்டிய பள்ளி மாணவன்
ADDED : நவ 10, 2025 01:29 AM
ஆதம்பாக்கம்: கஞ்சா போதையில் மூன்று பேரை வெட்டி, வாகனங்களை சேதப்படுத்தி, திருட்டு பைக்கில் தப்பி சென்ற 10ம் வகுப்பு மாணவனை, போலீசார் தேடுகின்றனர்.
ஆதம்பாக்கம், பரமேஸ்வரன் நகரை சேர்ந்த, 15 வயது சிறுவன், 10ம் வகுப்பு படித்து வருகிறான். இவரது தந்தை பிரிந்து சென்றதால், தாய் மற்றும் பாட்டியுடன் வசிக்கிறான்.
நேற்று, கஞ்சா போதையில் வீட்டில் இருந்த சிறுவன், அவரது பாட்டி வள்ளியிடம் தகராறு செய்து, கத்தியால் அவரை வெட்டினான். உயிர் பயத்தில் தெருவில் ஓடிய வள்ளியை, மீண்டும் வெட்ட முயன்றான்.
அப்போது அவனை தடுத்த சந்திரா, 55, முகம்மது ஹாரோன், 52, ஆகியோரையும் வெட்டினான். அதோடு, அங்கு நின்ற ஒரு ஆட்டோ, ஒரு பைக்கை சேதப்படுத்தினான்.
அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி, ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள், அதே வழியாக வந்த கிரேஸ்லின், 25, என்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் ஓட்டி வந்த பைக்கை பறித்து தப்பினான். காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தப்பி சென்ற மாணவனை போலீசார் தேடுகின்றனர்.

