ADDED : மார் 17, 2024 12:57 AM
சென்னை:யானைகவுனி பகுதியில் உள்ள மின்ட் தெருவில் நேற்று மதியம் 2:30 மணியவில், எஸ்.ஐ., சன்னி லாய்ட் மற்றும் ஏட்டு சதீஷ் ஆகியோர், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.
தொடர் விசாரணையில், 1.42 கோடி ரூபாய் 'ஹவாலா' பணம் என்பது தெரியவந்தது. இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், பூங்கா நகர் கோவிந்தப்பா நாயக்கன் தெருவைச் சேர்ந்த குணால் ஜெயின், 32, தர்ஷன், 22, அவர்களிடம் பணத்தை கொடுத்து அனுப்பிய, மண்ணடி சிவமுதலி தெருவைச் சேர்ந்த அரபாத், 47, ஆகியோரை  பிடித்து விசாரித்தனர்.
இந்த பணம் யாருக்கு சொல்கிறது. இதன் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட, 1.42 கோடி ரூபாய் மற்றும் சிக்கிய மூன்று பேரையும், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் பாலசந்தர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நேற்று மாலை 5:30 மணியளவில் ஒப்படைத்தனர்.
l பாரிமுனை, என்.எஸ்.சி. போஸ் சாலையில், போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த வாலிபரிடம் விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவரது பையை சோதனையிட்டனர். இதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரிந்தது. யானைகவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணகி வாலிபரிடம் விசாரித்தார். இதில், புரசைவாக்கம், கந்தப்பா தெருவைச் சேர்ந்த முகமது முஸ்தக், 38, என்பதும், உரிய ஆவணங்களின்றி 15 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச்செல்லப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

