/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிகளை மீறி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் பறிமுதல்
/
விதிகளை மீறி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் பறிமுதல்
ADDED : பிப் 15, 2024 12:18 AM

பூந்தமல்லி, பூந்தமல்லியில், விதிமுறைகளை மீறி அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற வேனை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பூந்தமல்லி, மேல்மா நகரில் செயல்படும் தனியார் பள்ளியில் நசரத்பேட்டை, மாங்காடு, குன்றத்துார், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த 3,000த்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளிக்கு தனியார் வாகனங்களில் மாணவர்கள் வந்து செல்கின்றனர். விதிமுறைகளை மீறி வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றிச் செல்வதாக புகார் எழுந்தது. இதன்படி பூந்தமல்லி வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காவேரி தலைமையிலான அதிகாரிகள், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆட்டோவில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள், வேனில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றி செல்வது தெரியவந்தது.
அதில் ஒரு வேன் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கி வந்ததும் தெரிந்தது.
அதிகாரிகள் வேனை பறிமுதல் செய்தனர்.
மேலும், விதிமுறைகளை மீறி அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற இரண்டு ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

