/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுயசார்பு குடிநீர் திட்டம் வாரியத்திடம் ஒப்படைப்பு... கைவிட்டு போகுது:காசு கொடுத்து வாங்கும் நெருக்கடியில் மாநகராட்சி
/
சுயசார்பு குடிநீர் திட்டம் வாரியத்திடம் ஒப்படைப்பு... கைவிட்டு போகுது:காசு கொடுத்து வாங்கும் நெருக்கடியில் மாநகராட்சி
சுயசார்பு குடிநீர் திட்டம் வாரியத்திடம் ஒப்படைப்பு... கைவிட்டு போகுது:காசு கொடுத்து வாங்கும் நெருக்கடியில் மாநகராட்சி
சுயசார்பு குடிநீர் திட்டம் வாரியத்திடம் ஒப்படைப்பு... கைவிட்டு போகுது:காசு கொடுத்து வாங்கும் நெருக்கடியில் மாநகராட்சி
UPDATED : ஆக 18, 2025 11:13 AM
ADDED : ஆக 18, 2025 02:09 AM

தாம்பரம் மாநகராட்சிக்கென தனியாக ஏற்படுத்தப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வரும் பாலாறு குடிநீர் திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன் மூலம், தினம் 140 லட்சம் லிட்டர் குடிநீரை பெற்று வந்த நிர்வாகம், இனி பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
![]() |
தாம்பரம், நகராட்சியாக இருந்தபோது, அப்பகுதிமக்களின் குடிநீர் தேவைக்காக 1973ல் குடிநீர் திட்டம் ஒன்று ஏற்படுத்தப்படுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட பாலாறு படுகை வில்லியம்பாக்கத்தில் இரண்டு கிணறுகள் அமைத்து, அங்கிருந்து, வாலாஜாபாத், ஒரகடம், படப்பை, முடிச்சூர் வழியாக குழாய் பதிக்கப்பட்டு, தினம் 30 லட்சம் லிட்டர் குடிநீர், மேற்கு - கிழக்கு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
140 லட்சம் லிட்டர் தொடர்ந்து, 2011ல் அதே பாலாறு படுகையில், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம் ஆகிய இடங்களில் கூடுதலாக 15 கிணறுகளும், ஐந்து இடங்களில் இணைப்பு பகுதிகளும் அமைத்து, இத்திட்டம் விரிவாக்கப்பட்டது.
![]() |
இத்திட்டத்தின் மூலம் தற்போது தினம் 140 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, மேலச்சேரியில் உள்ள பிரதான பம்பிங் ஸ்டேஷன் வழியாக தாம்பரத்திற்கு குடிநீர் அனுப்பப்படுகிறது.
தவிர, தாம்பரம் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட சில பகுதிகளுக்கு, உள்ளூர் ஆதாரம் மூலம் தண்ணீரை எடுத்து, சுத்திகரிப்பு செய்தும் குடிநீர் வழங்கப்படுகிறது. தவிர, மெட்ரோ குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்தும் குடிநீர் பெறப்படுகிறது.
இதில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் விநியோகம் செய்யும் குடிநீர், அதே பாலாறு படுகையில் இருந்தே கொண்டு வரப்படுகிறது.
அத்துறையினர், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம் ஆகிய இடங்களில் கிணறு அமைத்து, தனியாக குழாய்களை பொருத்தி தண்ணீரை எடுத்து வந்து, கட்டண முறையில் விநியோகம் செய்கின்றனர். அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சிக்கு மட்டும் தினம் 110 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மாநகராட்சிக்கென தனியாக பயன்படுத்தப்படும் குடிநீர் திட்டத்தை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்க முடிவு செய்து, அதற்கான முன்னேற்பாடு நடந்து வருகிறது.
ஏற்கனவே, பாலாறு படுகையில் இருந்து தண்ணீரை கொண்டு வரும் குடிநீர் வடிகால் வாரியத்திடம், இத்திட்டமும் ஒப்படைக்கப்பட உள்ளது.
இரு திட்டங்களையும் ஒன்றாக்கி, தனியாக சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீரை சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்யும் நோக்கத்திலேயே, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
நலச்சங்கம் எதிர்ப்பு இந்நிலையில், இரு துறை அதிகாரிகளும், பாலாறு படுகையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதனால், விரைவில், தாம்பரம் மாநகராட்சி குடிநீர் திட்டம், குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.
மாநகராட்சிக்கென தினம் 140 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படும் சொந்தமான திட்டத்தை, வேறு துறையிடம் ஒப்படைப்பதால், மாநகராட்சி மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என, மாநகராட்சியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சொந்த திட்டம் என்றால், தேவைப்படும் நேரத்தில் கூடுதலாக தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். திட்டத்தை விரிவுபடுத்தி, கூடுதல் கிணறுகள் அமைத்து, மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களுக்கும் விநியோகம் செய்யலாம். இது, எதிர்காலத்திற்கும் கைகொடுக்கும்.
இத்திட்டத்திற்கு மாநகராட்சி நிர்வாகம், ஆண்டுதோறும், 3 கோடி ரூபாய் வரை செலவு செய்கிறது என்றால், மாநகராட்சி எடுக்கும் தண்ணீரின் அளவு, அதைவிட பல மடங்கு அதிகமாக இருக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை.
அதேநேரம், குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைத்துவிட்டால், அத்துறைக்கு, 1,000 லிட்டருக்கு, 16 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் நாள்தோறும், 140 லட்சம் லிட்டர் தண்ணீர் வாங்கினால், மாதந்தோறும், 72 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.
ஆண்டுதோறும் பராமரிப்புக்காக செலவிட்டதோ, 3 கோடி ரூபாய் தான். அதனால், வேறு துறையிடம் ஒப்படைப்பது மாநகராட்சிக்கு லாபமா, நஷ்டமா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -