/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செம்பாக்கம் ஏரி கூறுபோட்டு விற்பனை அரை கிரவுண்ட் ரூ. 10 லட்சம் ! மீட்டெடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு
/
செம்பாக்கம் ஏரி கூறுபோட்டு விற்பனை அரை கிரவுண்ட் ரூ. 10 லட்சம் ! மீட்டெடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு
செம்பாக்கம் ஏரி கூறுபோட்டு விற்பனை அரை கிரவுண்ட் ரூ. 10 லட்சம் ! மீட்டெடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு
செம்பாக்கம் ஏரி கூறுபோட்டு விற்பனை அரை கிரவுண்ட் ரூ. 10 லட்சம் ! மீட்டெடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு
UPDATED : ஏப் 29, 2025 10:36 PM
ADDED : ஏப் 29, 2025 10:05 PM

குரோம்பேட்டை,:செம்பாக்கம் ஏரியை மர்ம கும்பல் கூறுபோட்டு விற்பனை செய்வதாகவும், அரை கிரவுண்ட் நிலம் 10 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'ஏரி முற்றிலும் காணாமல் போவதற்குள், மீட்டெடுக்க வேண்டும்' என, நீர் நிலை ஆர்வலர்கள், கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி, செம்பாக்கம் - அஸ்தினாபுரம் - சிட்லப்பாக்கம் எல்லையில், செம்பாக்கம் ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
செம்பாக்கம் - அஸ்தினாபுரம் பகுதியில் பெரும்பகுதி ஆக்கிரமிப்பில் சிக்கி, குடியிருப்புகளாக மாறிவிட்டன.
இதன் காரணமாக, ஏரியின் பரப்பளவு, 104 ஏக்கராக குறைந்து விட்டது.
மற்றொருபுறம், கழிவுநீர் கலப்பதாலும், குப்பை கொட்டப்படுவதாலும், தண்ணீர் நிறம் மாறி மாசடைந்துள்ளது.
பல ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு தீர்வாக, செம்பாக்கம் ஏரியை மீட்டு, முறையாக பராமரிக்க வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் போராடி வருகின்றனர்.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமான சி.எம்.டி.ஏ., ஒதுக்கிய, 10 கோடி ரூபாயில் இந்த ஏரி சீரமைக்கப்பட உள்ளதாக, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது.
கோரிக்கை
இக்கூட்டத்தில் அரசுக்கு முன் வைத்த கோரிக்கைகள்:
செம்பாக்கம் ஏரியை முழுமையாக அளந்து, எல்லைக்கல் பதித்து பாதுகாக்க வேண்டும். கழிவுநீரை சுத்திகரித்து விடவேண்டும்
தனியார் சார்பில் கரை அமைத்த போது, ஏரியினுள், 100 அடி அகலத்திற்கு மண்ணை கொட்டி மூடிவிட்டனர். அந்த மண்ணை அகற்றி, ஏரியை பகுதியை மீட்டு, விரிவுபடுத்த வேண்டும்.
ஏரியின் கொள்ளளவு, 2018ல், 10.5 அடியாக இருந்தது. தற்போது, 5.2 அடியாக உள்ளது. அதனால், துார்வாரி ஏரியை ஆழப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர்.
எதிர்பார்ப்பு
இந்நிலையில், இந்த ஏரியை ஆக்கிரமித்து, அரை கிரவுண்ட் நிலத்தை, 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக, அப்பகுதி நீர்நிலை ஆர்வலர்கள், செங்கல்பட்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
அஸ்தினாபுரத்தில், மகேஸ்வரி நகர் சாலை முடிந்ததும், செம்பாக்கம் ஏரி உள்வாய் பகுதி ஆரம்பிக்கிறது.
அப்பகுதியை சேர்ந்த ஒருவர், ஏரியில், 3 கிரவுண்ட் அளவிற்கு ஆக்கிரமித்து வைத்துள்ளார். அந்த நிலத்தை, அரை கிரவுண்ட், 10 லட்சம் ரூபாய் என, மூன்று பேருக்கு, 30 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.
அந்த நபரை அழைத்து, 'ஏரியை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என கூறினோம். அதற்கு, 'அதிகாரிகள் வந்தால் பார்த்துக் கொள்கிறேன்' என்று, திமிராக பேசுகிறார்.
ஏரி நிலத்தை விற்போர், வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, செம்பாக்கம் ஏரியை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்விஷயத்தில், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உரிய நடவடிக்கை எடுப்பார் என, அப்பகுதியினர் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.