சென்ட்ரிங் தொழிலாளியை கிணற்றில் தள்ளி கொலை: கூட்டாளிக்கு ‘காப்பு’
சென்ட்ரிங் தொழிலாளியை கிணற்றில் தள்ளி கொலை: கூட்டாளிக்கு ‘காப்பு’
ADDED : செப் 24, 2026 05:06 PM
திருவேற்காடு: திருவேற்காட்டில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் பாஸ்கரன், 44, என்ற ‘சென்ட்ரிங்’ தொழிலாளியை கிணற்றில் தள்ளி கொலை செய்த சரவணன், 37, என்ற அவரது கூட்டாளியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவேற்காடு, சின்ன கோலடி, ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன்; ‘சென்ட்ரிங்’ தொழிலாளி. இவருக்கு மனைவி சந்தியா, 37, மற்றும் 16, 12 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த 20ல் சென்ற பாஸ்கரன், வீட்டிற்கு திரும்பவில்லை. கடந்த 22ல், மேல்அயனம்பாக்கம் சந்திரமவுலீஸ்வரர் கோவில் அருகே உள்ள, 15 அடி ஆழ கிணற்றில், பாஸ்கரன் உடல் மிதந்தது. திருவேற்காடு போலீசார் உடலை கைப்பற்றினர்.
உடலில் காயம் எதுவும் இல்லாததால் போதையில் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என, போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தன் கணவர் பாஸ்கரனுக்கு நீச்சல் நன்றாக தெரியும் எனவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மனைவி சந்தியா போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார், அப்பகுதி ‘சி.சி.டி.வி.’ காட்சிகளை ஆய்வு செய்தபோது, பாஸ்கரனுடன் மேல் அயனம்பாக்கத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சரவணன், 37, கிணற்று பகுதிக்கு செல்வதும், சிறிது நேரத்திற்கு பின் சரவணன் மட்டும் தனியாக திரும்புவதும் தெரிந்தது. தொடர்ந்து, சரவணனை நேற்று, போலீசார் கைது செய்தனர்.
இக்கொலை குறித்து போலீசார் கூறியதாவது:
மேல் அயனம்பாக்கத்தில் உள்ள அரசு மதுக்கடையில் பாஸ்கரனுக்கும், சரவணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 20ல், மேல் அயனம்பாக்கம் கிணறு அருகே, இருவரும் மது அருந்தினர்.
அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரவணன் ஆத்திரமடைந்து, பாஸ்கரனை கிணற்றில் தள்ளி, அங்கிருந்து சென்றுவிட்டார். போதையில் இருந்ததால், பாஸ்கரனால் நீந்த முடியாமல் கிணற்று நீரில் மூழ்கி இறந்திருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
