/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்னக பெண் ஊழியருக்கு தொல்லை போராட்டத்தால் சேவை பணி பாதிப்பு
/
மின்னக பெண் ஊழியருக்கு தொல்லை போராட்டத்தால் சேவை பணி பாதிப்பு
மின்னக பெண் ஊழியருக்கு தொல்லை போராட்டத்தால் சேவை பணி பாதிப்பு
மின்னக பெண் ஊழியருக்கு தொல்லை போராட்டத்தால் சேவை பணி பாதிப்பு
ADDED : நவ 22, 2024 12:33 AM

சென்னை, அண்ணா சாலையில், மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின் நுகர்வோர் சேவை மையம் உள்ளது. அதில், 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில், 24 மணி நேரமும் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவிக்கலாம்.
இந்த மையம், ஒப்பந்த நிறுவனம் வாயிலாக நிர்வாகம் செய்யப்படுகிறது. ஒரு ஷிப்டுக்கு, 65 பேர் என, மூன்று ஷிப்டில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஆண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மின்னகத்திற்கு வெளியில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, நேற்று மதியம், சமூக நலத்துறை அதிகாரிகள், மின்னகத்தில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால், நேற்று காலை முதல் மதியம் வரை, மின்னகம் சேவை மைய பணிகள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து, ஊழியர்கள் கூறியதாவது:
இந்த மையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு, ஐ.சி.சி.எஸ்., என்ற தனியார் நிறுவனத்திடம் உள்ளது. இங்குள்ள ஊழியர்களில், 50 சதவீதம் பேர் பெண்கள். கடந்த வெள்ளிக் கிழமை இரவு பெண் ஊழியர் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவருக்கு உதவியாக மையத்தில், 'டீம் லீடர்' ஆக பணிபுரியும் ஆண் ஊழியர் ஒருவரும், ஒரு பெண் ஊழியரும் சென்றனர். உடன் சென்ற அந்த பெண் ஊழியரிடம், டீம் லீடர் பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது. கணினி மைய அதிகாரியிடம் புகார் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.
அந்த நபர் வேலைக்கு வரவில்லை. அவரை காப்பாற்ற அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக நலத்துறை அதிகாரிகள் மின்னகம் வந்து, பெண், ஆண் ஊழியர்களை தனித்தனியே விசாரித்துள்ளனர்.
இவ்வாறு கூறினர்.