/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ நகர், ஆலப்பாக்கம் பகுதிகளில் 2 ஆண்டுகளாக குடிநீரில் கழிவுநீர் கலப்பு
/
மெட்ரோ நகர், ஆலப்பாக்கம் பகுதிகளில் 2 ஆண்டுகளாக குடிநீரில் கழிவுநீர் கலப்பு
மெட்ரோ நகர், ஆலப்பாக்கம் பகுதிகளில் 2 ஆண்டுகளாக குடிநீரில் கழிவுநீர் கலப்பு
மெட்ரோ நகர், ஆலப்பாக்கம் பகுதிகளில் 2 ஆண்டுகளாக குடிநீரில் கழிவுநீர் கலப்பு
ADDED : ஆக 25, 2025 01:22 AM
மதுரவாயல்; மதுரவாயலில் உள்ள மெட்ரோ நகர், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், இரண்டு ஆண்டுகளாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், பகுதிமக்கள் பாதிக்கப்படுகின்றனர். திட்ட மதிப்பீடு தயாரித்து, பழைய குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் 146 மற்றும் 147வது வார்டுகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில், க ழிவுநீர் கலந்து வந்தது.
குடிநீர் குழாயில் 'ரோபோட்' கேமரா செலுத்தி, எந்த இடத்தில் கழிவுநீர் கலக்கிறது என்பதை கண்டறிந்த குடிநீர் வாரிய அதிகாரிகள், முதற்கட்டமாக 3.75 கி.மீ., துாரத்திற்கு, 9 கோடி ரூபாய் செலவில், டி.ஐ., குழாய் எனப்படும் இரும்பு குழாய் அமைத்து வருகிறது. இதற்கு முன் பிளாஸ்டிக் குழாய்கள், நிலத்தில் புதைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், வார்டு வரையறையின்போது, 146வது வார்டில் இருந்த மெட்ரோ நகர், ஆலப்பாக்கம், பெருமாள் கோவில் தெரு, அய்யாவு நாயக்கர் தெரு உள்ளிட்ட பகுதிகள், 150வது வார்டில் சேர்க்கப்பட்டது. இப்பகுதிகளிலும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் பிரச்னை நிலவி வருகிறது.
ஆனால், குடிநீர் குழாய் மாற்றி அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டபோது, 146 மற்றும் 147வது வார்டுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டது.
மெட்ரோ நகர், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் 150வது வார்டில் இணைக்கப்பட்டதால், ஒப்பந்தம் விடப்பட்டபோது, இப்பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதன் காரணமாக, மெட்ரோ நகர், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு ஆண்டுகளாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களையும் மாற்றி அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து, பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஒரு மணி நேரம் விடப்படும் குடிநீரில், 45 நிமிடம் கழிவுநீர் மட்டுமே வருகிறது. நல்ல தண்ணீர் வர துவங்கும் போது, குழாயில் தண்ணீர் வருவதும் நின்று விடுகிறது. இதனால் வெளி ஆட்களிடம், ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது' என்றனர்.