/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செக்ஸ் தொல்லை கொடுத்து கொடூரம்: வீட்டு வேலைக்கு வந்த சிறுமி கொலை; நாடகம் ஆடிய 6 பேர் கைது
/
செக்ஸ் தொல்லை கொடுத்து கொடூரம்: வீட்டு வேலைக்கு வந்த சிறுமி கொலை; நாடகம் ஆடிய 6 பேர் கைது
செக்ஸ் தொல்லை கொடுத்து கொடூரம்: வீட்டு வேலைக்கு வந்த சிறுமி கொலை; நாடகம் ஆடிய 6 பேர் கைது
செக்ஸ் தொல்லை கொடுத்து கொடூரம்: வீட்டு வேலைக்கு வந்த சிறுமி கொலை; நாடகம் ஆடிய 6 பேர் கைது
ADDED : நவ 04, 2024 06:03 AM

அமைந்தகரை: அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வீட்டு வேலை செய்யும் சிறுமிக்கு, வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து சித்ரவதை செய்ததும், ஒத்துழைக்க மறுத்ததால் கொடூரமாக கொலை செய்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக, வீட்டு உரிமையாளர், அவரது மனைவி, உறவினர்கள் என, 6 பேரை போலீசார் கைது செய்தனர். போக்சோ வழக்கு பதிவாகி உள்ளது.
சிகரெட் சூடு
சென்னை அமைந்தகரை, சதாசிவம் மேத்தா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முகமது நவாஸ், 40. இவர், வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். இவரது மனைவி நாசியா, 30.
கடந்த ஆண்டு டிசம்பர் முதல், தஞ்சாவூரைச் சேர்ந்த, 15 வயது சிறுமி, நவாஸ் வீட்டிலேயே தங்கி வீட்டு வேலை செய்து வந்தார்.
கடந்த தீபாவளி அன்று, குளிப்பதற்காக கழிப்பறைக்கு சென்ற சிறுமி, நீண்ட நேரமாக வெளியில் வராமல் இருந்ததாகவும், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சிறுமி இறந்த நிலையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வீட்டு உரிமையாளர் உடனே போலீசிற்கு தகவல் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த ஒருநாளுக்கு பின், கடந்த 1ம் தேதி அமைந்தகரை போலீசுக்கு, தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தாமதமாக தகவல் தந்ததாலும், சிறுமியின் உடல் முழுதும் சிகரெட்டால் சூடு போட்டது போன்ற காயங்கள் இருந்ததாலும், சந்தேக மரணம் என, வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
உறவினர் வாயிலாக சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து வந்து, முறையாக சம்பளம் கொடுக்காமல் இருந்தனர். பெற்றோரை பார்க்கவும் சிறுமியை அனுமதிக்கவில்லை.
சிறுமிக்கு பல மாதங்களாக பாலியல் ரீதியான துன்புறுத்தல்களும் தொடர்ந்துள்ளது.
மூடி மறைக்க முயற்சி
தீபாவளி நாளில் முகமது நவாஸ், அவரது மனைவி, நவாசின் நண்பர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில், சிறுமியை மயங்கி உயிரிழந்தது, விசாரணையில் தெரியவந்தது. கொலையை மூடி மறைக்க முயற்சி நடந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, சந்தேக மரணம் வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றினர்.
போக்சோ வழக்கும் பதிவு செய்து, முகமது நவாஸ், அவரது மனைவி நாசியா, நவாசின் நண்பர் லோகேஷ், 25, அவரது மனைவி ஜெயசக்தி, 24, உறவினர் சீமா பேகம், 29, மற்றொரு வீட்டு வேலை செய்த மகேஸ்வரி, 44 உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.
கொலை செய்தது ஏன்?
போலீசாரிடம் நாசியா அளித்துள்ள வாக்குமூலம்: கோவை தென்னம்பாளையத்தில், எங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த போது, அங்கு வீட்டு வேலை செய்து வந்த சிறுமியின் தாயை சந்தித்தோம்.
அவரிடம் பேசி, எங்கள் குழந்தையை கவனித்து கொள்ள, சிறுமியை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தோம். சிறுமியின் தந்தை இறந்து விட்டார். ஒரு மகனுடன், அவரது தாயும் ஏழ்மை நிலையில் உள்ளார்.
இதனால், சிறுமியை அடிமை போல நடத்தினோம்; போதிய சம்பளமும் தரவில்லை. அவரது தாயை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. நான்கு மாதத்திற்கு முன் தான், சிறுமி பூப்பெய்தினார். அவர் சொந்த ஊருக்கு சென்றால், மீண்டும் வர மாட்டார் என்பதால் நாங்கள் அனுப்பவில்லை.
என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இதனால், எங்களுக்குள் தினமும் தகராறு ஏற்படும். என் கணவரின் பார்வை சிறுமியின் பக்கம் திரும்பியது. அதில், எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
ஏதாவது காரணத்தை சொல்லி, சிறுமியை சித்ரவதை செய்ய துவங்கினேன். திருட்டு பட்டமும் கட்டி வந்தேன். சிறுமி மீது என் கணவருக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக, குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என, ஏதேதோ பொய் சொல்லி, அவருக்கும் ஆத்திரம் உருவாகச் செய்தேன்.
என் கணவரின் நண்பர் லோகேஷ் மீது, விருதுநகர் மாவட்டத்தில் கொலை மற்றும் ஆயுதம் வைத்திருந்த வழக்கு உள்ளது. மனைவி ஜெயசக்தியுடன் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். லோகேஷ் முரட்டுத்தனமானர். அவரிடமும், சிறுமி மீது வெறுப்பு ஏற்படும் வகையில், பொய் கதைகளை சொல்லி வந்தேன். ஒரு முறை லோகேஷ், ஜெயசக்தி ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வந்த போது, அவர்கள் எடுத்து வந்த பொருள் ஒன்று தொலைந்து விட்டதாக கூறினர்.
இது தான் சமயம் என, அந்த பொருளை சிறுமி தான் திருடி இருப்பார் என்று கூறினேன். என்னுடன் சேர்ந்து, அவர்களும் சிறுமியை திட்டினர். தேடிப்பார்த்த போது அந்த பொருள் மேஜைக்கு கீழே கிடந்தது.
சிறுமி எந்த வேலை செய்தாலும், குறை சொல்லி திட்டுவேன். அவரின் நெஞ்சுப்பகுதி உள்பட பல இடங்களில் அயன்பாக்ஸால் சூடு வைத்துள்ளேன். சொல்லக்கூடாத இடத்தையும் காயப்படுத்தினேன். என்னுடன் சேர்ந்து, கணவரும் சிறுமியை சித்ரவதை செய்ய துவங்கினார்.
தீபாவளி அன்று எங்கள் வீட்டிற்கு, லோகேஷ், ஜெயசக்தி, என் கணவரின் சகோதரி சீமா பேகம் ஆகியோர் வந்தனர். அன்று மகேஸ்வரியும் இருந்தார். அப்போது, மகனின் பிறப்பு உறுப்பை பிடித்து சிறுமி இழுத்து விட்டதாக குற்றம் சாட்டி சத்தம் போட்டேன். இதனால், எல்லாரும் சேர்ந்து சிறுமியை அடித்தோம். லோகேஷ் வயிற்றில் எட்டி உதைத்தார். அதில், சிறுமி மயங்கி விழுந்து விட்டார்; மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார். அவர் இறந்துவிட்டார் என, தெரியவந்து, உடலை குளியல் அறையில் கிடத்தி விட்டு, வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.