/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்ரீசந்தியா நாட்டியத்தில் சிவமயம்
/
ஸ்ரீசந்தியா நாட்டியத்தில் சிவமயம்
ADDED : டிச 30, 2025 05:47 AM

ஆ டலரசன் சிவனை மையமாக வைத்து, வளரும் நாட்டியக் கலைஞரான ஸ்ரீசந்தியா கணேசன் நிகழ்த்திய ஆடல் கச்சேரி, பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது.
'சர்வம் சிவமயம்' எனும் பொருளில், தன் நாட்டியத்தை அமைத்திருந்தார். நடேச கவுத்துவம், 'சுவாமி நான் உந்தன் அடிமை' பதவர்ணம், 'தெருவில் வாரானோ' பதம், சூர்யா ராக தில்லானா என, நாட்டியத்தின் முதலும் முடிவும் ஆதி சிவனை போற்றும் பாடலாகவே வழங்கப்பட்டது.
ஆழ்வார்பேட்டை 'மேடை' சபாவில், சிவனின் அலங்கார அமைப்பை நினைவுபடுத்தும்விதமாக, தன் இடது காலை, பின்னும், முன்னும் என வளைத்து, அவர் செய்த நிருத்தங்கள், கண்முன்னே சிற்பங்களாய் தோன்றின.
தலையில் கங்கை நதி, புலித்தோல் போர்த்திய உடை, திரிசூலம், டமருகம் போன்றவற்றை கைகளில் ஏந்திய ஈசனை நடனத்தில் குறிப்பிட்டு காட்டியது அம்சமாக இருந்தது.
ஹரி, பிரம்மன், தேவ பூத கணங்கள் என, பல கோடி பேர் நடராஜனின் ஆடலை தரிசித்து வணங்குவதை, ஒற்றை ஆளாய் சுற்றி சுழன்று ஆடி, அதை படிப்படியாக விளக்கினார்.
தொடர்ந்து, தெருவில் நடந்து செல்லும் ஈசனே, என்னை ஏறெடுத்து காணமாட்டாயோ' என, கோலமிட்டபடி நாயகி ஏக்கத்தில் பார்ப்பதை, பக்தி சிருங்காரத்தில் பதத்தை கணகச்சிதமாக மாற்றினார்.
டமருகம் ஏந்தி சிவன் ஆட, அண்ட கணங்களும் ஆடிய என போற்றிய ஆடல் கோர்வைகளும், சாஹித்ய வரிகளும் அடங்கிய தில்லானாவோடு, நாட்டியத்தை நிறைவு செய்தார்.
சிதம்பரத்தில் நான்கு வாசல் கோபுரம் உள்ளது. அதன் நடுவே தில்லை நடராஜர் வீற்றுள்ளார். அதை அப்படியே நகலெடுத்ததுபோல், தில்லானாவில் காட்டினார். மாதுரி பல்ராம் மற்றும் லதா ராஜகோபாலனின் பயிற்சியிலும் ஒருங்கிணைப்பிலும், தன் நாட்டியத்தை நன்கு மெருகேற்றியிருந்தார் ஸ்ரீசந்தியா.
- மா.அன்புக்கரசி

