/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் மின் கணக்கீட்டாளர் பற்றாக்குறை நுகர்வோர் பாதிப்பு
/
ஆவடியில் மின் கணக்கீட்டாளர் பற்றாக்குறை நுகர்வோர் பாதிப்பு
ஆவடியில் மின் கணக்கீட்டாளர் பற்றாக்குறை நுகர்வோர் பாதிப்பு
ஆவடியில் மின் கணக்கீட்டாளர் பற்றாக்குறை நுகர்வோர் பாதிப்பு
ADDED : செப் 25, 2024 12:31 AM

ஆவடி, ஆவடி மின் வாரிய நிர்வாக மண்டலத்தின் கீழ், ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், காட்டூர், சோழவரம், அலமாதி, புழல், செங்குன்றம் உட்பட, 24 உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
ஒவ்வொரு அலுவலகமும், உதவி பொறியாளர், ஒயர் மேன் என, போதுமான பணியாளர்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன.
குறிப்பாக, மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. இதனால், 60 நாட்களுக்கு ஒருமுறை எடுக்க வேண்டிய மின் கணக்கிடுதல் பணிகள் தொய்வடைந்துள்ளன. திருமுல்லைவாயில், சோழம்பேடு பகுதியில் செந்தில் நகர், உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, 13,000க்கும் மேற்பட்ட நுகர்வோர் உள்ளனர்.
இங்கு மூன்று கணக்கீட்டாளர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் ஓய்வு பெற்றனர். ஒருவர் சொந்த ஊருக்கு இடமாற்றம் வாங்கி சென்றார்.
கடந்த மூன்று மாதங்களாக கணக்கீட்டாளர் இல்லாததால், மின் கட்டணம் பதிவேற்றும் பணி முறையாக நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, குளறுபடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 4ம் தேதி முதல், இங்குள்ள வசூல் மையம் மூடி இருப்பதால் பொதுமக்கள், 750 மீட்டர் தொலைவில் உள்ள ஆவடி தெற்கு உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று கட்டணம் செலுத்துகின்றனர்.
பட்டாபிராம், கோபாலபுரம் கிழக்கு, மேற்கு பகுதிகளில் 1,100 நுகர்வோர் உள்ளனர். இவர்கள் பட்டாபிராம், சேக்காடு துணை மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர். இங்கு, இரண்டு பெண் கணக்கீட்டாளர் இருந்தனர். இருவரும் பதவி உயர்வு, இடமாற்றம் காரணமாக வேறு இடங்களுக்கு சென்றனர்.
தற்போது, அந்த பணிகளை ஒருவரே செய்து வருகிறார். இதனால், கடந்த நான்கு மாதங்களாக, மேற்கூறிய பகுதியில் மின் கணக்கீடு சரிவர செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த இரண்டு மாதமாக, 5,000 ரூபாய்க்கு மேல், மின் கட்டணத்தை பணமாக கட்டக்கூடாது என, அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்றவர்கள் மற்றும் வயதானோர் தான், பெரும்பாலும் மின் கட்டணம் செலுத்த வருகின்றனர். இந்த அறிவிப்பால் அனைவரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நடுத்தர மக்கள், கூலி தொழிலாளர்கள், வியாபாரிகள், பணப்பிரச்னை மற்றும் ஞாபக மறதியால் கடைசி நேரத்தில் கட்டும் போது, மின்வாரிய அலுவலகத்தில் 'சர்வர்' கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அபராதம் சேர்த்து கட்டும் நிலை ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி பொறியாளர், ஒயர்மேன், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
'மின் நுகர்வோரில் 50 சதவீதம் பேர், 5,000 ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்துகின்றனர். ரேஷன் கடைகளில் உள்ளது போல், 'ஜிபே' வாயிலாக கட்டணம் வசூலிக்கலாம். நுகர்வோரின் பாதிப்பை தவிர்க்கலாம்.
- எல்.காமராஜ், 51, செங்குன்றம்.
ஆட்சிக்கு வரும் முன், தி.மு.க., அறிவித்த, மாதாந்திர மின் கட்டணம் வசூலிப்பு முறை நடைமுறைப்படுத்தினால், சுமை குறைந்து நுகர்வோர் பயனடைவர்.
- டி.சடகோபன், 64,
தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர்