/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடுவதா? அலட்சியம் கூடாது தண்டனை தர பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
/
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடுவதா? அலட்சியம் கூடாது தண்டனை தர பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடுவதா? அலட்சியம் கூடாது தண்டனை தர பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடுவதா? அலட்சியம் கூடாது தண்டனை தர பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
UPDATED : ஆக 08, 2025 06:46 AM
ADDED : ஆக 07, 2025 11:53 PM

சென்னை: 'மழைநீர் வடிகால்வாய்களில் கழிவுநீரை விடும் வணிக நிறுவனங்களுக்கு தண்டனை தரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதில், குடிநீர் வாரியம் அலட்சியம் காட்டக்கூடாது. மாசு கட்டுப்பாட்டு வாரியமும் கண்காணிக்க வேண்டும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள, கிழக்கு காமராஜ் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு: திருவான்மியூர் காமராஜ் நகர், சிவசுந்தர் அவென்யூ பகுதிகளில், பாதாள சாக்கடை அமைப்பு பாழடைந்த நிலையில் உள்ளது. கிழக்கு காமராஜ் நகரில் உள்ள மழைநீர் வடிகால்களில், கழிவுநீர் கலக்கிறது. இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், மழை காலங்களில், மழை நீர் வெளியேறாமல், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதில் கழிவுநீரும் கலந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் சுகாதார சீர்கேடால் தவித்தனர். இதனால் நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தீர்ப்பாய உத்தரவுப்படி, மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கட்டமைப்புகள் சரி செய்யப்பட்டு உள்ளன. தேவைப்பட்டால், மழை காலங்களில் கூடுதல் மோட்டார்கள் வாயிலாக வெள்ள நீர் வெளியேற்றப்படும்' என, தெரிவித்தார்.
மழை காலங்களில் கிழக்கு காமராஜ் நகர், சிவசுந்தர் அவென்யூவில் உள்ள நிலைமையை மாநகராட்சி கண்காணித்து, மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற, அதிக சக்தி கொண்ட மோட்டார்களை வாடகைக்கு, மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.
மழைநீர் வடிகாலில், கழிவுநீர் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய, கனமழை பெய்யும் போதெல்லாம், குடிநீர் வாரியம் கண்காணிக்க வேண்டும்.
கிழக்கு காமராஜ் நகரில் குடியிருப்பவர்கள், தங்கள் வீடுகளில், நீர்தேக்க தொட்டி அமைத்து மழைநீரை சேமிக்கலாம்.
இதுகுறித்து, குடியிருப்போர் நலச்சங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இப்பகுதியில் உள்ள தனியார், அரசு நிறுவன கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க, சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைநீர் கால்வாய்களில், சட்டவிரோதமாக கழிவு நீரை விடும் வணிக நிறுவனங்களை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும். அதன் அடிப்படையில், தவறு செய்யும் வணிக நிறுவனங்கள் மீது, சென்னை குடிநீர் வாரியம், தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ரூ.2 லட்சம் வரை அபராதம்
சென்னை குடிநீர் வாரியம் சட்டம் - 1978, பிரிவு - 6, 2022ம் ஆண்டு, பிரிவு - 6 ஏ என, திருத்தம் கொண்டு வரப்பட்டது. சென்னை மாநகராட்சி சட்டம் -1919 பிரிவு 99ல், 2022ம் ஆண்டு, பிரிவு 99 ஏ என, திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, பாதாள சாக்கடை திட்டம் இருந்தும், வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு வசதி எடுக்காமல் வடிகாலில் விட்டால், 30 நாள் கால அவகாசத்தில் இணைப்பு வழங்க நோட்டீஸ் வழங்கப்படும்.அதையும் மீறினால், அபராதம், 'சீல்' வைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.லாரிகளில் கழிவுநீரை ஏற்றி வந்து, வடிகால் உள்ளிட்ட நீர்நிலைகளில் விட்டால், அபராதத்துடன் லாரி பறிமுதல் செய்யப்படும்.