/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறை கைதிகளுக்கு கஞ்சா வீசியோர் கைது
/
சிறை கைதிகளுக்கு கஞ்சா வீசியோர் கைது
ADDED : ஆக 08, 2025 12:09 AM
வியாசர்பாடி, நீதிமன்ற விசாரணை முடித்து, சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட கைதிகளுக்கு, கஞ்சா வீசிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
புழல் சிறை கைதிகள் 14 பேர், விசாரணைக்காக சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்திற்கு, கடந்த 4ம் தேதி அழைத்து செல்லப்பட்டனர். புதுப்பேட்டை ஆயுதப்படை போலீஸ் எஸ்.ஐ., அமரன் தலைமையில், 17 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விசாரணை முடிந்து, கைதிகள் வாகனத்தில், 14 பேரும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில், அம்பேத்கர் கல்லுாரி சிக்னல் அருகே, போலீஸ் வாகனம் சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது, பின்னால் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள், கஞ்சா உருண்டையை, போலீஸ் வாகனத்திற்குள் வீசி தப்பினர். உள்ளே கைதிகள் இருந்ததால், கஞ்சா உருண்டையை வீசியவர்களை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.
இது குறித்து, ஆயுதப்படை போலீசார், எம்.கே.பி., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய, வியாசர்பாடி, பி.கல்யாணபுரத்தைச் சேர்ந்த உதயகுமார், 34, வினோத், 24, ஆகியோரை நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.