/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு மின்சார ரயில்களின் சேவை பாதிப்பு
/
அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு மின்சார ரயில்களின் சேவை பாதிப்பு
அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு மின்சார ரயில்களின் சேவை பாதிப்பு
அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு மின்சார ரயில்களின் சேவை பாதிப்பு
ADDED : மார் 22, 2025 12:21 AM

சென்னை, சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் மின்சார ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டனர்.
சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி தடத்தில் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மின்சார ரயில்களின் சேவையில், அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதால் பயணியர் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், அரக்கோணம் அருகில், மின்சார ரயில் செல்லும் தடத்தில் நேற்று மாலை 6:50 மணிக்கு, திடீரென சிக்னலில் கோளாறு ஏற்பட்டது.
இதனால், இந்த தடத்தில், சென்னை சென்ட்ரல் வர வேண்டிய மின்சார ரயில்கள், ஆங்காங்கே வரிசையாக நிறுத்தப்பட்டன.
மேலும், சென்னைக்கு வந்து, பின், கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை செல்ல வேண்டிய மின்சார ரயில்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், ஆயிரக்கணக்கான பயணியர், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வளாகத்தில் காத்திருந்தனர். ஆத்திரமடைந்த பயணியர், அங்கிருந்த ரயில்வே அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், பேசின்பிரிட்ஜ், பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. அரக்கோணத்தில் ரயில் சிக்னல் பழுது சீரமைக்கப்பட்டு, இரவு 7:45 மணிக்கு பின், மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
தினமும் தாமதம்
சென்னையில் இருந்து ஆவடி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்தில் கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்குவதில்லை. பராமரிப்பு பணி, தொழில்நுட்ப கோளாறு என தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால், பணிகளை முடித்து வீட்டுக்கு செல்லும் பயணியர் கடும் அவதிப்படுகின்றனர். ரயில்களின் தாமதம் குறித்து, மின்சார ரயில் நிலையங்களில் முன்கூட்டியே அறிவிப்பும் கிடையாது. இதனால், பயணியர் தினமும் அவதியடைகின்றனர்.
- ரயில் பயணியர்