/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மரண சாலையாக மாறிய தேர்வாய் சிப்காட் சாலை
/
மரண சாலையாக மாறிய தேர்வாய் சிப்காட் சாலை
ADDED : அக் 29, 2024 12:09 AM

முதல்வரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை
ஊத்துக்கோட்டை தமிழகத்தை தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மாற்ற, பல்வேறு தொழிற்சாலை அமைக்க, முதல்வர் முயற்சி எடுத்து வருகிறார். அவரது செயல்பாட்டை தடுக்கும் வகையில், அதிகாரிகள் சாலை உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதால், தொழில் முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தியடைந்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஜனப்பன்சத்திரம் முதல் ஆந்திர மாநிலம் திருப்பதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், தாராட்சி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் மற்றும் இணைப்பு சாலை வழியே செல்லும் கிராமங்கள் என, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த வழித்தடத்தில் சூளைமேனியில் இருந்து வலதுபுறம் செல்லும் வழியில் தேர்வாய் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது.
தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகம், 2010ல் 1,127 ஏக்கர் பரப்பளவில் துவக்கப்பட்டது. இங்கு, 46 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தினமும் கன்டெய்னர் லாரிகள், சரக்கு லாரிகள் என, 400க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
ஜனப்பன்சத்திரம் -- திருப்பதி சாலையில், தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. அதிகளவு வாகனங்கள் சென்று வரும் இச்சாலை அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இந்த சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில், மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், பாலவாக்கம் உள்ளிட்ட இடங்களில், பெரிய பள்ளங்கள் விழுந்துள்ளன.
கன்னிகைப்பேரில் தனியார் கல்லுாரி எதிரில், பெரிய பள்ளத்தில் மழைநீர் தேங்கி குளம்போல் உள்ளது. பள்ளங்களை சீர்படுத்தாமல், ஜல்லிக்கற்களை கொட்டி உள்ளனர்.
இரவு நேரத்தில் டூ- வீலர்களில் செல்வோர் வழுக்கி விழுகின்றனர். ஜனப்பன்சத்திரம் துவங்கி, ஊத்துக்கோட்டை வரையிலான சாலையை ஒட்டி, அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை துறை வசம் உள்ள இச்சாலையை, அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
தமிழகத்தை தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக மாற்ற, தமிழக முதல்வர் ஸ்டாலின், வெளிநாடுகளுக்கு சென்று, தொழிற்துறையினரை சந்தித்து முதலீடுகளை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இங்குள்ள அதிகாரிகள் தொழிற்சாலைகளுக்கு தேவையான சாலை வசதியை செய்து தராமல் இழுத்தடிப்பதால், தொழில்துறையினர் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.
தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு எடுத்து செல்ல முடியாததால், தொழில்கள் முடங்கும் அபாயம் உள்ளது.
ஜனப்பன்சத்திரம் -- ஊத்துக்கோட்டை இடையே, 32 கி.மீ., துாரமுள்ள சாலையை சீரமைக்க, முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.