/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவான்மியூர் - உத்தண்டி வரை ஆறுவழி சாலை திறப்பு ஓரிரு மாதங்களில்: 14 கி.மீ.,க்கு நான்குவழி மேம்பாலமும் அமைக்க திட்டம்
/
திருவான்மியூர் - உத்தண்டி வரை ஆறுவழி சாலை திறப்பு ஓரிரு மாதங்களில்: 14 கி.மீ.,க்கு நான்குவழி மேம்பாலமும் அமைக்க திட்டம்
திருவான்மியூர் - உத்தண்டி வரை ஆறுவழி சாலை திறப்பு ஓரிரு மாதங்களில்: 14 கி.மீ.,க்கு நான்குவழி மேம்பாலமும் அமைக்க திட்டம்
திருவான்மியூர் - உத்தண்டி வரை ஆறுவழி சாலை திறப்பு ஓரிரு மாதங்களில்: 14 கி.மீ.,க்கு நான்குவழி மேம்பாலமும் அமைக்க திட்டம்
UPDATED : ஏப் 14, 2025 02:04 AM
ADDED : ஏப் 14, 2025 01:43 AM

இ.சி.ஆரில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்துக்கு நெரிசல் தீர்வு காண அமைக்கப்பட்டு வரும், திருவான்மியூரில் இருந்து அக்கரை வரையிலான ஆறுவழிச் சாலை பணி, ஓரிரு மாதத்தில் முடிந்து, முழு பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதேசமயம், எதிர்கால நெரிசலை கருத்தில் கொண்டு, திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை, 14 கி.மீ., துாரம் உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க, தமிழக அரசு, 2,100 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதன் வாயிலாக, பத்து வழி சாலையாக இ.சி.ஆர்., மாற உள்ளது.
சென்னையின் முக்கிய சாலையாக, இ.சி.ஆர்., என்ற கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., நீளம் உடைய இந்த சாலை, இடத்தை பொறுத்து, 60 - 70 அடி அகலத்தில், நான்கு வழியாக உள்ளது.
இந்த சாலையில், வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவான்மியூரில் இருந்து உத்தண்டி நோக்கி, தினமும் 1.20 லட்சம் வாகனங்கள் செல்கின்றன.
இதனால், நான்குவழியை ஆறுவழிச் சாலையாக மாற்ற முடிவு செய்து, இழப்பீடு வழங்க 778 கோடி ரூபாயும், சாலை விரிவாக்கத்திற்கு, 174.92 கோடி ரூபாயும் தமிழக அரசு ஒதுக்கியது.
சாலை விரிவாக்க பணி, 2008ம் ஆண்டு துவங்கியது. நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய் துறையும், சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையும் செய்கின்றன.
பணி துவங்கி, 16 ஆண்டுகளாகியும் இன்னும் முடியவில்லை. நிர்வாக குளறுபடியால் இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு, சாலை விரிவாக்க பணி மந்தமாக நடந்தது.
திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான 10.5 கி.மீ., துாரத்தில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. பட்டா, நந்தம் போன்ற வகைப்பாடு இடங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி 98 சதவீதம் முடிந்தது.
இதையடுத்து, கட்டடங்கள் இடிக்கப்பட்ட பகுதியில், சாலை அகலப்படுத்தும் பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஓரிரு மாதத்தில், ஆறுவழி சாலை பணியை முடித்து, வாகன போக்குவரத்திற்காக முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், எதிர்கால நெரிசலை கருத்தில் கொண்டு, சாலை மைய பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.
ஏற்கனவே, டைடல் பார்க் சந்திப்பு அருகில் எல்.பி., சாலையில் இருந்து கொட்டிவாக்கம் வரை, 300 கோடி ரூபாயில், 2.2 கி.மீ., துாரத்தில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. நிர்வாக சிக்கலால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், இந்த மேம்பாலத்தை, அதே இடத்தில் இருந்து, இ.சி.ஆர்., உத்தண்டி சுங்கச்சாவடி வரை, 14 கி.மீ., துாரம் நீட்டிக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக, 52 லட்சம் ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதையடுத்து, 2,100 கோடி ரூபாயில் நான்குவழிச் சாலையாக, உயர்மட்ட மேம்பாலத்தை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன்வாயிலாக, இ.சி.ஆரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என, நெடுஞ்சாலைத் துறை நம்பிக்கை தெரிவித்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஆறுவழிச் சாலையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், தொலை துாரமாக செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
விமான நிலையம், செங்கல்பட்டு, புதுச்சேரி நோக்கி செல்வோர், நெரிசலில் சிக்கி திணறுகின்றனர். ஆறுவழிச் சாலையாக மாற்றினாலும், அடுத்த சில ஆண்டுகளில் நெரிசல் மேலும் அதிகரிக்கும்.
இதை கருத்தில் கொண்டு, உயர்மட்ட மேம்பால சாலை அமைக்கப்படுகிறது. தற்போது, திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை செல்ல, 45 நிமிடம் வரை ஆகிறது. உயர்மட்ட சாலை பயன்பாட்டுக்கு வந்தால், 15 நிமிடத்தில் செல்ல முடியும். எரிபொருளும் மிச்சமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -