/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரு மாதத்திற்கு முன் மாயமான வாலிபரின் எலும்புக்கூடு காட்டூரில் கண்டெடுப்பு?
/
ஒரு மாதத்திற்கு முன் மாயமான வாலிபரின் எலும்புக்கூடு காட்டூரில் கண்டெடுப்பு?
ஒரு மாதத்திற்கு முன் மாயமான வாலிபரின் எலும்புக்கூடு காட்டூரில் கண்டெடுப்பு?
ஒரு மாதத்திற்கு முன் மாயமான வாலிபரின் எலும்புக்கூடு காட்டூரில் கண்டெடுப்பு?
ADDED : ஆக 20, 2025 03:10 AM

தாம்பரம், ஒரு மாதத்திற்கு முன், தாம்பரத்தில் இருந்து சிவகங்கை ரயிலில் சென்ற வாலிபர் மாயமான நிலையில், காட்டூர் ரயில் நிலையப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு, அவருடையதுதானா என போலீசார் விசாரிக்கின்றனர்.
தாம்பரம், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன், 50. இவரது மகன் பாண்டி, 25. இருவரும், நெய் வியாபாரம் செய்து வந்தனர். கடந்த மாதம் 8ம் தேதி, பாண்டி சொந்த ஊரான சிவகங்கைக்கு செல்ல ரயிலில் ஏறியுள்ளார்.
ஆனால் ஊருக்கு செல்லவில்லை. இது குறித்து, ஜூலை 17ம் தேதி தாம்பரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆக., 12ம் தேதி பாண்டியின் மொபைல் போன் சிக்னல் திருச்சி, அய்யம்பாளையத்தை காட்டியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அப்பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழில் செய்யும் மணிகண்டன் என்பவர், பாண்டியின் மொபைல் போனை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
அவரிடம் விசாரித்ததில், ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும்போது, காட்டூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில், போன் உடைந்த நிலையிலும், அருகில் 300 ரூபாயும் இருந்ததாககூறினார். அந்த பணத்தை கொண்டு, ெமாபைல் போனை பழுதுபார்த்து பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அப்பகுதிக்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அங்கிருந்து 50 மீட்டர் தொலைவில், புதர் பகுதியில் மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது.
அது, பாண்டியின் எலும்புக்கூடாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அடையாளம் காண, அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டூர் ரயில் நிலையம் அருகே உடல் கண்டெடுக்கப்பட்டதால், விருதாச்சலம் ரயில்வே போலீசாருக்கு, வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.