ADDED : பிப் 09, 2025 12:37 AM
சென்னை, சென்னையில் சில நாட்களாக அதிகாலை முதல் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை 7:00 மணிக்கு பின், மூடுபனி ஏற்பட்டு, மோசமான வானிலை நிலவியது. இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, தோஹா, அந்தமான், மும்பையில் இருந்து வந்த 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல், பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
ஓடுபாதையில் பனி மூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் மும்பை, திருச்சி, கோவை, திருவனந்தபுரம், துாத்துக்குடி, ஹைதராபாத் உள்ளிட்ட 12 விமானங்கள், வானில் சிறிது நேரம் வட்டமடித்து கொண்டிருந்தன. பின், ஒன்றன் பின் ஒன்றாக தரையிறக்கப்பட்டன.
சென்னையில் இருந்து, காலையில் பல்வேறு இடங்களுக்கு புறப்பட வேண்டிய 20க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
மோசமான வானிலை நிலவியதால், சென்னையில் இருந்து கொச்சிக்கு இயக்கப்படும் இரண்டு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. சென்னையில் நேற்று காலை மட்டும் 35க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிக்கப்பட்டது.
விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டதால், பயணியர் வேறு வழியின்றி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக பனி மூட்டம் அதிகாலை 5:00 மணி துவங்கி காலை 8:00 மணி வரை இருக்கும். நேற்று வழக்கத்துக்கு மாறாக பனி மூட்டம் நிலவியதால், விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
இருப்பினும் பயணியருக்கு எஸ்.ஓ.பி., முறைப்படி தகவல் அனுப்பப்பட்டது' என்றனர்.