/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எஸ்.ஆர்., இடத்தை பி.டி.ஓ., பெயரில் பட்டா மாற்றக்கோரி சமூக ஆர்வலர் மனு
/
ஓ.எஸ்.ஆர்., இடத்தை பி.டி.ஓ., பெயரில் பட்டா மாற்றக்கோரி சமூக ஆர்வலர் மனு
ஓ.எஸ்.ஆர்., இடத்தை பி.டி.ஓ., பெயரில் பட்டா மாற்றக்கோரி சமூக ஆர்வலர் மனு
ஓ.எஸ்.ஆர்., இடத்தை பி.டி.ஓ., பெயரில் பட்டா மாற்றக்கோரி சமூக ஆர்வலர் மனு
ADDED : ஆக 27, 2025 12:14 AM
சென்னை, தனியார் கட்டுமான நிறுவனம் பொது பயன்பாட்டுக்கு ஒப்படைத்த, 3.50 ஏக்கர் நிலத்துக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யக்கோரி, சமூக ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர்.
நகர், ஊரமைப்பு சட்டப்படி, கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் தனியார் நிறுவனங்கள், திட்டப்பரப்பில் 10 சதவீத நிலத்தை பூங்கா, விளையாட்டு திடல் போன்ற பொது பயன்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும்.
திறந்தவெளி ஒதுக்கீடாக வழங்கப்படும் இந்த நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இத்தகைய நிலங்களை பெறும் உள்ளாட்சி அமைப்புகள், தங்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்வதில்லை. பட்டாவில் பழைய உரிமையாளர் பெயர் இருப்பதை பயன்படுத்தி, பொது பயன்பாட்டு நிலங்கள் அபகரிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.
ஐயப்பன்தாங்கலை சேர்ந்த சமூக ஆர்வலர் பி.செந்தில்குமார், குன்றத்துார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அளித்துள் மனு:
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐயப்பன்தாங்கல் பகுதியில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் மனைப்பிரிவு உருவாக்கப்பட்டது.
கடந்த, 1985ல் இந்த மனைப்பிரிவு உருவாக்கப்பட்டபோது, 3.50 ஏக்கர் நிலம் பொது பயன்பாட்டுக்காக, ஊராட்சி ஒன்றியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், இந்த நிலத்துக்கான பட்டா தற்போது வரை பழைய உரிமையாளர்கள் பெயரிலேயே உள்ளது. இதனால், இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர்.
எனவே, இந்த நிலத்துக்கான பட்டாவை, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும். அப்போதுதான், இந்த பொது பயன்பாட்டு நிலத்தை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக மக்கள், தங்கள் பெயருக்கு வாங்கப்பட்ட நிலத்துக்கு பட்டா மாறுதல் கோரித்தான் மனு அளிப்பது வழக்கம். இதற்கு மாறாக, குன்றத்துார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெயருக்கு, பொது நிலத்தை பட்டா மாறுதல் செய்ய கோரிக்கை மனு வந்துள்ளது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
***