/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 ஆண்டுக்குபின் சமூக நலக்கூடம் மீட்பு
/
2 ஆண்டுக்குபின் சமூக நலக்கூடம் மீட்பு
ADDED : நவ 03, 2024 12:34 AM

-
பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, நெமிலிச்சேரி ஊராட்சியின் ஒன்பது வார்டுகளில், 12,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு, 2003ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், 10 லட்சம் ரூபாயில், சென்னை - திருத்தணி நெடுஞ்சாலையில், சமூக நலக்கூடம் கட்டப்பட்டது.
கடந்த 2022ல், தி.மு.க.,வை சேர்ந்த நெமிலிச்சேரி ஊராட்சி மன்ற தலைவி தமிழ்செல்வி, வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பை மீறி, சமூக நலக்கூடத்தை தனியாருக்கு வாடகைக்கு கொடுத்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, 'விடியல் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கம்' என்ற பெயரில், தையல் இயந்திரங்கள் வைத்து, மாணவ - மாணவியருக்கான சீருடைகள் தைத்து, மாவட்ட நிர்வாகத்திடம் விற்று வருமானம் ஈட்டி வந்தனர்.
அவர்கள் பயன்படுத்தும் வர்த்தக ரீதியிலான மின்சாரத்துக்கு, ஊராட்சி நிர்வாகத்தால் கட்டணம் செலுத்தப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்தது.இதனால், ஊராட்சி நிர்வாகத்திற்கு வருமானம் இழப்பு ஏற்பட்டது. இது குறித்து, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர், மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர்.
ஆனால், நடவடிக்கை எடுத்தால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் எனக்கூறி, தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய பிரமுகர் கொடுத்த அழுத்தம் காரணமாக, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டது.
இது குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன், தனியார் அமைப்பினர், சமூக நலக்கூடத்தை காலி செய்து கொடுத்தனர்.
மக்கள் பிரச்னையை சுட்டிக்காட்டி, சமூக நலக்கூடத்தை மீட்க உதவிய, 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு, சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும், புதர்மண்டி காட்சியளிக்கும் சமூக நலக்கூடத்தை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நமது நிருபர் -