/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேட்டையாடும் பறவைகளுக்கு வண்டலுாரில் சிறப்பு மையம்
/
வேட்டையாடும் பறவைகளுக்கு வண்டலுாரில் சிறப்பு மையம்
வேட்டையாடும் பறவைகளுக்கு வண்டலுாரில் சிறப்பு மையம்
வேட்டையாடும் பறவைகளுக்கு வண்டலுாரில் சிறப்பு மையம்
ADDED : செப் 03, 2025 12:22 AM
சென்னை :கழுகு, ஆந்தை உள்ளிட்ட, 70க்கும் மேற்பட்ட வேட்டையாடி பறவைகளுக்கான சிறப்பு மையம், வண்டலுாரில் துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வனப்பகுதிகளில் வேட்டையாடி உணவு தேடும் உயிரினங்களில் புலி, சிறுத்தை போன்றவை முதன்மையாக உள்ளன. இதே போன்று பறவைகளிலும் வேட்டையாடி உணவு தேடும் உயிரினங்கள் உள்ளன.
இந்த வகையில் கழுகுகள், ஆந்தை போன்றவையே இதில் பரவலாக அறியப்படுகிறது. ஆனால், இந்த பறவைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
இதனால், வன உயிரினங்களின் உணவு சங்கிலி தொடர்பில் தடை ஏற்படுகிறது. இந்நிலையில் அழிந்து வரும் வேட்டையாடும் பறவைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, சென்னையில் ஒரு கோடி ரூபாய் நிதியில், வேட்டையாடும் பறவைகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்படும் என, கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, வண்டலுாரில் உள்ள வன உயிரின உயர்நிலை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், தமிழக வேட்டையாடி பறவைகள் சிறப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, கழுகு, ஆந்தைகள், விரால் அடிப்பான், ராஜாளி, வல்லுாறு, சதுப்புநில பருந்து, புள்ளி ஆந்தை, கூகை உள்ளிட்ட, 70க்கும் மேற்பட்ட வேட்டையாடி பறவைகளை பாதுகாப்பதற்கான பணிகளை இந்த மையம் மேற்கொள்ளும்.
இது குறித்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிவிப்பு:
வேட்டையாடும் பறவைகளுக்காக முதல் முறையாக தமிழக வனத்துறையில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வேட்டையாடி பறவைகள் வாழிடங்களை பாதுகாப்பது, அந்த இடங்கள் குறித்த வரைபடங்கள் உருவாக்குவது, வலசை பாதைகள் குறித்த தகவல் திரட்டுதல், எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.