UPDATED : நவ 17, 2026 04:28 PM
ADDED : நவ 17, 2026 04:22 PM
கிரிக்கெட் லீக்: ஒய்.எம்.சி.சி., அணி வெற்றி
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடக்கின்றன. இதில், ஐந்தாவது டிவிஷன் ‘பி’ மண்டலப் போட்டியில், முதலில் பேட் செய்த கிராண்ட் பிரிக்ஸ் சி.சி., அணி, 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியன் ஆயில் அணி, 43.5 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், ஒய்.எம்.சி.சி., அணி 42.5 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டுவென்டியத் செஞ்சுரி அணி, ஒய்.எம்.சி.சி., பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 26.4 ஓவர்களில் 64 ரன்களுக்கு சுருண்டது. இதனால், ஒய்.எம்.சி.சி., அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மாநில செஸ்: விண்ணப்பிக்க அழைப்பு
பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை கல்லுாரி மற்றும் ஜி.எம்., செஸ் அகாடமி இணைந்து, மாநில செஸ் போட்டி, கவுரிவாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் வரும் 29ம் தேதி நடத்த உள்ளன. இதில், எட்டு, 10, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட இருபாலருக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்க உள்ளன. ‘பிடே’ விதிப்படி, ‘சுவிஸ்’ அடிப்படையில் போட்டிகள் நடக்க உள்ளன. பங்கேற்க விரும்புவோர், வரும் 27ம் தேதிக்குள் முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 99415 14097, 88382 29938 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
