/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவர்கள் படிப்பை கைவிடக்கூடாது சிருங்கேரி சன்னிதானம் அறிவுரை
/
மாணவர்கள் படிப்பை கைவிடக்கூடாது சிருங்கேரி சன்னிதானம் அறிவுரை
மாணவர்கள் படிப்பை கைவிடக்கூடாது சிருங்கேரி சன்னிதானம் அறிவுரை
மாணவர்கள் படிப்பை கைவிடக்கூடாது சிருங்கேரி சன்னிதானம் அறிவுரை
ADDED : நவ 13, 2024 02:43 AM

சென்னை:''சாதாரண ஓட்டுனரின் பிள்ளைகள், இன்று நீதிபதிகள் போன்ற உயரிய பொறுப்புக்கு வருவதற்கு படிப்புதான் காரணம். எனவே, படிப்பை விட்டு விடக்கூடாது. கவன சிதறல் ஏற்படும் என்பதால், மாணவர்கள் மொபைல் போன்களை தவிர்க்க வேண்டும்,'' என, சிருங்கேரி சன்னிதானம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சென்னையில் விஜய யாத்திரை மேற்கொண்டு வரும் சிருங்கேரி சன்னிதானம், திருவான்மியூர் ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், ஸ்ரீவித்யாதீர்த்த பவுண்டேஷன் சார்பில், நேற்று நடந்த ஸ்ரீஆதிசங்கரர் தின விழாவில் பங்கேற்றார்.
பாராட்டு
விழாவில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கல்வியாளர் பட்டாபிராமன், தொழிலதிபர் மோகன் சீனிவாசன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமநாதன் ஆகியோருக்கு, 'ஸ்ரீவித்யாபாரதி புரஸ்கார்' விருதை, அவர் வழங்கினார்.
ஸ்ரீஆதிசங்கரர் தினத்தை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில், முதல் பரிசு பெற்ற மாணவ - மாணவியருக்கு, பரிசுகள், கேடயங்கள், பரிசு கோப்பைகள் வழங்கி, சன்னிதானம் பாராட்டு தெரிவித்தார்.
விழாவின் நிறைவாக, சிருங்கேரி சன்னிதானம் வழங்கிய அருளுரை:
ஸ்ரீஆதிசங்கரர், 12 நுாற்றாண்டுகளுக்கு முன் அவதரித்தவர். அவர், அத்வைத தத்துவத்தை உலகிற்கு அருளினார். மனித பிறவியை ஏன் எடுத்துள்ளோம்; எப்படி வாழ வேண்டும்; என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக் கூடாது என்பதை நமக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்.
நாம் எவ்வளவு விஷயங்களை கற்றுக் கொண்டாலும்,கற்க வேண்டிய விஷயங்கள் அதைவிட அதிகம் இருக்கும். ஆனால், அத்வைத தத்துவத்தை முழுமையாக கற்று தேர்ந்தால், இன்னொன்றை கற்க வேண்டிய தேவை இருக்காது.
தேசம், தர்மம் இரு கண்கள்
மனதில் உறுதியேற்றால்மட்டுமே, எந்த செயலிலும் வெற்றி பெற முடியும். பலன் கிடைக்கும் வரை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். இந்த உலகில் வாழும் அனைவருக்கும் தேசமும், தர்மமும் இரண்டு கண்கள் போன்றது.
சாதாரண ஓட்டுநர் போன்றவர்களின் பிள்ளைகள், இன்று நீதிபதிகள் போன்ற உயரிய பொறுப்புக்கு வருகின்றனர். அதற்கு காரணம் படிப்புதான். எனவே, படிப்பை விட்டு விடக்கூடாது.
அருளுரை
மொபைல் போனால் பல நன்மைகள் நடக்கின்றன; பல தீமைகளும் நடக்கின்றன. மொபைல் போனால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. எனவே, மாணவர்கள் மொபைல் போனை தவிர்க்க வேண்டும்.
ஆசிரியர்கள், பெற்றோர் காட்டும் வழியில் செல்ல வேண்டும். மாணவர்கள்தான் நாட்டின் செல்வங்கள் என்பதால், அவர்கள் சரியான பாதையில் செல்வதை உறுதிப்படுத்துவது நம் கடமை.
ஸ்ரீவித்யாபாரதி புரஸ்கார் விருது பெற்ற முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் எங்களுக்கு பிரியமானவர்.அரசியல்வாதிக்கும், சிருங்கேரி மடத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். ஆனால், அவர் அரசியல்வாதியாக இங்கே வரவில்லை; எப்போதும்போல இன்றும் சிஷ்யராகவே வந்திருக்கிறார்.
இவ்வாறு சிருங்கேரி சன்னிதானம் அருளுரை வழங்கினார்.
தொடர்ந்து நேற்று மாலை, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லுாரியில் நடந்த 'குரு வந்தனம்' நிகழ்ச்சியில், சன்னிதானம் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட தலைமை செயல் அதிகாரி முரளி, 17 நாட்கள் நடந்த சென்னை விஜய யாத்திரை வெற்றிகரமாக நடக்க, அனைத்து வகைகளிலும் உதவி செய்த, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.