குப்பையை தரம் பிரித்து வழங்க ‘ஸ்டிக்கர்’ ஒட்டி விழிப்புணர்வு
குப்பையை தரம் பிரித்து வழங்க ‘ஸ்டிக்கர்’ ஒட்டி விழிப்புணர்வு
UPDATED : அக் 15, 2026 05:41 PM
ADDED : அக் 15, 2026 05:36 PM

திருவேற்காடு: திருவேற்காடு நகராட்சியில், 18 வார்டுகளில் 31 ஆயிரத்து 554 வீடுகள், 6125 வணிக நிறுவனங்கள் உள்ளன. தினமும் 40 ஆயிரம் கிலோ குப்பை சேகரமாகின்றன. அக்., 1ம் தேதி முதல், தங்கள் வீடுகளில் உள்ள குப்பை கழிவுகளை, மட்கும் குப்பை, மட்காத குப்பை, சுகாதார கழிவுகள் மற்றும் சிறப்பு கழிவுகள் என, நான்கு வகையாக பிரித்து வழங்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியது.
இந்த நிலையில், நகராட்சி சுகாதார பிரிவு ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள், ஒவ்வொரு வீடாக ஆய்வு செய்து, ‘குப்பையை தரம் பிரித்து வழங்கும் வீடு’ என்ற, ‘ஸ்டிக்கர்’ ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் நாட்களில், வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்க மேலும் பலர் முன்வருவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
