/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணாமலை நகர் சுரங்கப்பாதை உயரத்தை குறைக்க கடும் எதிர்ப்பு
/
அண்ணாமலை நகர் சுரங்கப்பாதை உயரத்தை குறைக்க கடும் எதிர்ப்பு
அண்ணாமலை நகர் சுரங்கப்பாதை உயரத்தை குறைக்க கடும் எதிர்ப்பு
அண்ணாமலை நகர் சுரங்கப்பாதை உயரத்தை குறைக்க கடும் எதிர்ப்பு
ADDED : நவ 04, 2024 04:49 AM
திருவொற்றியூர்:அண்ணாமலை நகர் ரயில்வே சுரங்கப்பாதை, மண் சரிவு காரணமாக உயரம் குறைக்கப்படுவதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
திருவொற்றியூர் மேற்கு பகுதிகளில் பல்வேறு குடியிருப்பு நகர்கள் அமைந்துள்ளன. அண்ணாமலை நகர், பாலகிருஷ்ணா நகர், ராமசாமி நகர், சார்லஸ் நகர், சரவணா நகர், காமராஜர் நகர், கார்கில் நகர், வெற்றி விநாயகர் நகர் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இப்பகுதியில் 15,000த்திற்கும் மேற்பட்ட வீடுகளில், 60,000த்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
மேற்கு பகுதி மக்கள், அண்ணாமலை நகர் ரயில்வே கேட் வழியாக தான், திருவொற்றியூர் கிழக்கு - நெடுஞ்சாலைக்கு சென்று வந்தனர். இதில் ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் போது, விபத்தில் சிக்கி பலர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். இறுதி ஊர்வலங்களின் போது, தண்டவாளங்களை கடந்து, சடலத்தை கொண்டு செல்வதிலும் பெரும் சிக்கல் நிலவி வந்தது.
இதற்கு தீர்வாக, அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில், 30 கோடி ரூபாயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி, 2022 ல் துவங்கியது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகளால், இரண்டு ஆண்டுகளாகியும், 10 சதவீதம் பணிகள் கூட முடியவில்லை.
சமீபத்தில், சுரங்கப்பாதை பணிகளுக்காக பள்ளம் தோண்டிய போது, மண் சரிவு ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி, பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், மண்சரிவை காரணம் காட்டி, சுரங்கப்பாதையின் உயரத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக, ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், மண்டல குழு கூட்டத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, 20 அடி உயரம்என்றிருந்த நிலையில், அதை பாதியாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
'இதன் காரணமாக, பேருந்து போக்குவரத்து செயல்படுத்த முடியாது; மாறாக, மேற்கு பகுதிகள் வளர்ச்சி அடையாமலே போய்விடும்' என, கவுன்சிலர் கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, சுரங்கப்பாதையின் உயரத்தை குறைக்காமல், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
பயனில்லை
இரண்டு ஆண்டுகளாக, அண்ணாமலை நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் நடக்கிறது. துவக்கத்தில், பேருந்துகள் செல்லக்கூடிய வகையில் விசாலமாக சுரங்கப்பாதை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்து. தற்போது, அளவு குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், சுரங்கப்பாதை அமைத்தும் பயனில்லாத நிலை ஏற்படும். வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி மாணவ - மாணவியரும் அபாயகரமான நிலையில், தண்டவாளங்களை கடந்து செல்வது தொடர்கிறது.
- கே.பாஸ்கர், 57,
ஆட்டோ ஓட்டுனர், அண்ணாமலை நகர், திருவொற்றியூர்.
உயிரிழப்பு
ரேஷன் பொருள் வாங்குவதற்கும், மளிகை கடை செல்வதற்கும் கூட தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. முதியோர் தண்டவாளத்தை கடக்கும்போது, ரயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றனர்.
பேருந்து செல்ல முடியாத அளவிற்கு சுரங்கப்பாதை குறுகலாக அமைக்கப்படுவது ஏற்புடையதல்ல, எனவே, பேருந்து செல்லும் அளவிற்காவது ரயில்வே சுரங்கப்பாதை அமைத்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
-- மேரி, 56,
அண்ணாமலை நகர், திருவொற்றியூர்.