ADDED : செப் 27, 2026 10:34 PM
கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கத்தில் பேருந்து மோதி, 16 வயது பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாம்பரம் அடுத்த அனகாபுத்துாரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 40 ; கட்டட வேலை செய்து வருகிறார். நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில், ஸ்ரீனிவாசன் மகன், பிளஸ் 1 மாணவன் ரஞ்சித், 16 அதே பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் தினேஷ், 14 ; கல்லுாரி மாணவன் ஆதித்தியன், 22 ; மூவரும் ஒரே பைக்கில் கிளாம்பாக்கத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். ஆதித்தியன் பைக்கை ஓட்டினார். தைலாவரம் அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில், ரஞ்சித் சம்பவ இடத்திலேயே பலியானார். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதித்தியன், தினேஷ் இருவரையும் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஞ்சித்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
