/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறி விஷவாயு கசிவு அச்சத்தை நீக்கி பள்ளியை திறக்க வலியுறுத்தல்
/
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறி விஷவாயு கசிவு அச்சத்தை நீக்கி பள்ளியை திறக்க வலியுறுத்தல்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறி விஷவாயு கசிவு அச்சத்தை நீக்கி பள்ளியை திறக்க வலியுறுத்தல்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறி விஷவாயு கசிவு அச்சத்தை நீக்கி பள்ளியை திறக்க வலியுறுத்தல்
ADDED : நவ 07, 2024 12:12 AM

திருவொற்றியூர்,
விஷவாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளி மூடப்பட்ட நிலையில், 'ஆன்லைன் வகுப்பு வேண்டாம்; அச்சத்தை போக்கி பள்ளியை திறக்க வேண்டும்' என, நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை, திருவொற்றியூர், கிராமத்தெருவில், விக்டரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, எல்.கே.ஜி., - பிளஸ் 2 வரை, 1,970 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
கடந்த அக்., 25ல், பள்ளி கட்டடத்தின் மூன்றாவது தளத்தில், திடீர் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அத்தளத்தில் இருந்த, 8, 9, 10ம் வகுப்பு மாணவியர் 45 பேர், வாந்தி, மயக்கம், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். இவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, மறுநாள் வீடு திரும்பினர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
விஷவாயு கசிவு குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பள்ளியில் ஆய்வு செய்தனர். காற்று தர பரிசோதனையும் நடந்தது. ஆனால், விஷவாயு பரவியதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இதற்கிடையில், நவ., 4 மீண்டும் பள்ளி திறக்கப்பட்டு, வழக்கம்போல் செயல்பட்டது.
வாயு கசிவிற்கான காரணம் குறித்து பெற்றோருக்கு விளக்கம் தராமல், பள்ளியை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் உட்பட, 100க்கும் மேற்பட்ட பெற்றோர் வாக்குவாதம் செய்தனர்.
வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோதே, திடீரென, 6, 7, 9, 10 ம் வகுப்பு மாணவியர்கள், 10 பேர் அடுத்தடுத்து மயக்கம், மூச்சு திணறல் மற்றும் வாந்தி ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளிக்கு வந்த திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ., சங்கர், 'யாரைக் கேட்டு பள்ளியை திறந்தீர்கள்' என, பள்ளி நிர்வாகத்தை கண்டித்தார். பிரச்னை பெரிதானதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்று தரம் கண்காணிக்கும் வாகனத்தை நிறுத்தி, ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையில், பள்ளி நிர்வாகம் சார்பில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ - மாணவியரின் பெற்றோரை அழைத்து, நேற்று ஆலோசனை நடத்தியது.
'ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம்; நேரடி வகுப்பை உடனடியாக துவக்க வேண்டும்' என, பெற்றோர் வலியுறுத்தினர். மேலும், வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரை, கூட்டத்திற்கு அழைக்கவில்லை என, மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டினர்.
இந்த பள்ளியில் இருந்து, பத்தாம் வகுப்பில், 160 ; பிளஸ் 1 ல், 175 ; பிளஸ் 2 ல், 160 என, 495 பேர் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
நேரம் வீணாகுது!
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர், ஆன்லைன் வகுப்பு வேண்டாம்; நேரடி வகுப்பு நடத்த மனுக்கள் கொடுத்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறையிடம் இதை சமர்ப்பிக்க உள்ளோம். இதுவரை எந்த பாதிப்பும் கண்டறியப் படவில்லை. போதுமான வகுப்பறை, காற்றோட்டம், கழிப்பறை வசதி உள்ளது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் நேரம் விரயமாகிறது.
- ரூத் வனிதா, பள்ளி முதல்வர்.
பெற்றோருக்கு பயம்
விஷவாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படும், தனியார் பள்ளி வளாகத்தின் பின்புறம் தான் வசிக்கிறோம். அன்று, மாணவியர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், வாயு கசிவை நாங்கள் உணரவில்லை. இருப்பினும், பெற்றோருக்கு ஒரு வித பயம் ஏற்பட்டு உள்ளது. அதை நீக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை.
- பி.லட்சுமி, 60,
எஸ்.பி., கோவில் தெரு,
திருவொற்றியூர்.
கட்டமைப்பு வசதி
நாங்கள் விஷவாயு கசிவை உணரவில்லை. பள்ளியில் முறை யான கட்டமைப்பு வசதி இல்லை. விபத்து ஏற்பட்டால், மாணவர்கள் வெளியேறுவதில் சிக்கல் உள்ளது. எங்களுக்கு தெரிந்தவரை, கழிப்பறை பயன்படுத்தும் நேரங்களில்தான், இந்த வாயு பிரச்னை ஏற்பட்டுள்ளது. பெற்றோரின் அச்சத்தை போக்காமல், பள்ளியை திறக்க சாத்தியமில்லை.
- எம்.மோகன்ராஜ், 31, எஸ்.பி., கோவில் தெரு,
திருவொற்றியூர்.