/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.வி.வெங்கட்ராமன் தெரு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
/
எஸ்.வி.வெங்கட்ராமன் தெரு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
எஸ்.வி.வெங்கட்ராமன் தெரு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
எஸ்.வி.வெங்கட்ராமன் தெரு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : ஜன 21, 2025 12:28 AM

சென்னை, நாடகக் கலைஞர் எஸ்.வி.வெங்கட்ராமன் நுாற்றாண்டு விழா, எஸ்.வி.சேகரின் 75ம் பிறந்த நாள், நாடகப் பிரியா குழுவின் 50வது ஆண்டு விழா என முப்பெரும் விழா, ஆழ்வார்பேட்டை நாரதகான சபாவில் நேற்று நடந்தது.
இதையொட்டி, 7,000வது நாடக விழா நடந்தது. இதில் பங்கேற்று, நாடகக் குழுவினருக்கு கேடயம் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
எஸ்.வி.வெங்கட்ராமன் குறித்து, நான் அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. அவர் நாடக உலகில் கொடிகட்டி பறந்தவர். தமிழகத்தின் முதல் 'டிவி' தொடர் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். ரத்த தானம் செய்வதில், மாபெரும் சாதனை படைத்துள்ளார். அவரது நுாற்றாண்டு விழாவை, எழுச்சியுடன் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
எஸ்.வி.சேகர் இப்போது எந்த கட்சி என்று தெரியாது. நம்ம கட்சி. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்தபோதும்,முதல்வராக இருந்த கருணாநிதியிடம் மனு அளிப்பார். அதை உடனே கருணாநிதி பரிசீலிப்பார்.
அந்த அளவிற்கு பாசத்துடன் இருவரும் இருந்தனர். அவர், 7,000 நாடகத்தை மேடையேற்றி வெற்றி பெற்றுள்ளார்.
எந்த பிரச்னையாக இருந்தாலும், எந்த கட்சியில் இருந்தாலும், எதையும் விமர்சனம் செய்யக்கூடிய ஆற்றல், எஸ்.வி.சேகருக்கு உண்டு. இன்றும், எதை பற்றியும் கவலைப்படாமல் தான் சார்ந்த கட்சியைச் சேர்ந்தவர்களையும் விமர்சித்து வருகிறார்.
எஸ்.வி.சேகரின் கோரிக்கையை ஏற்று, மயிலாப்பூரில் அவரது தந்தை வாழ்ந்த தெருவிற்கு, சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 'எஸ்.வி.வெங்கட்ராமன் தெரு' என விரைவில் பெயர் சூட்டப்படும்.
எஸ்.வி.சேகர் கோரிக்கையை நான் நிறைவேற்றிவிட்டேன். நான் வைத்த கோரிக்கையை அவர் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக எஸ்.வி.சேகர் வரவேற்று பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், முன்னாள் நீதிபதி அக்பர் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியாக அஸ்வின் சேகர் நன்றி கூறினார்.

