/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.60 லட்சத்தில் கூட்ட அரங்கம் தாம்பரம் மாநகராட்சி முடிவு
/
ரூ.60 லட்சத்தில் கூட்ட அரங்கம் தாம்பரம் மாநகராட்சி முடிவு
ரூ.60 லட்சத்தில் கூட்ட அரங்கம் தாம்பரம் மாநகராட்சி முடிவு
ரூ.60 லட்சத்தில் கூட்ட அரங்கம் தாம்பரம் மாநகராட்சி முடிவு
ADDED : ஜன 29, 2025 12:16 AM
தாம்பரம்,தாம்பரம் மாநகராட்சியில், போதிய இடவசதி இல்லாத காரணத்தால், ஆய்வு, கூட்டங்கள் நடத்த ஏதுவாக, 60 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக கூட்ட அரங்கம் கட்ட, நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், செம்பாக்கம், திருநீர்மலை, பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாநகராட்சி, ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகளை கொண்டுள்ளன. மாநகராட்சிக்கான கட்டடம் இல்லாததால், தாம்பரம் நகராட்சி செயல்பட்டு வந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து, சானடோரியம் காசநோய் மருத்துவமனை வளாகத்தில், 4.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, 43.40 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இப்பணி முடிய இரண்டு ஆண்டுகள் ஆகும். அதேநேரத்தில், தாம்பரத்துடன், சுற்றிஉள்ள 15 ஊராட்சிகள் இணையவுள்ளன.
தற்போதுள்ள கூட்ட அரங்கு போதுமான அளவிற்கு இல்லை. மாநகராட்சி கூட்டம் நடக்கும் போது, 70 கவுன்சிலர்கள் அருகருகே அமர வேண்டிஉள்ளது.
அதிகாரிகள் அமருவதற்கும் இடவசதி இல்லை. மேலும், ஆய்வு கூட்டங்கள் நடத்துவதற்கும் இடமில்லாமல் தவிக்கின்றனர்.
அதனால், தனியாக கூட்ட அரங்கு கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, கட்டடத்தின் இரண்டாவது மாடியில், 60 லட்சம் ரூபாய் செலவில், 100 பேர் அமரும் வகையில், கூரை அமைத்து கூட்ட அரங்கு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அரங்கம் கட்டினால், மாநகராட்சி கூட்டம் மட்டுமின்றி பல்வேறு கூட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக இருக்கும்.
மாநகராட்சி மேயர் வசந்த குமாரியிடம் கூறும்போது, ''தற்போதுள்ள கூட்ட அரங்கம் போதுமானதாக இல்லை. தற்காலிக கூட்ட அரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவங்கும்,'' என்றார்.

