/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டிஜிட்டல் கைது' மூலம் தாம்பரம் நபரிடம் ரூ.2.25 கோடி மோசடி: மஹா., நபர்கள் கைது
/
'டிஜிட்டல் கைது' மூலம் தாம்பரம் நபரிடம் ரூ.2.25 கோடி மோசடி: மஹா., நபர்கள் கைது
'டிஜிட்டல் கைது' மூலம் தாம்பரம் நபரிடம் ரூ.2.25 கோடி மோசடி: மஹா., நபர்கள் கைது
'டிஜிட்டல் கைது' மூலம் தாம்பரம் நபரிடம் ரூ.2.25 கோடி மோசடி: மஹா., நபர்கள் கைது
ADDED : ஆக 07, 2025 12:47 AM
தாம்பரம், தாம்பரம் நபரை போலீசார் என தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், 'டிஜிட்டல் அரஸ்ட்' எனக்கூறி, 2.25 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, 'வாட்ஸாப்' அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு, தங்களை காவல் துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பின், 'எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய, ஒரு லட்சம் ரூபாய் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது' எனக் கூறியுள்ளனர். சிறிது நேரம் கழித்து, போன் செய்த மற்றொரு நபர், 'தான் டில்லி சைபர் குற்றப்பிரிவு அதிகாரி' எனக்கூறி, தங்கள் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், கைது நடவடிக்கையை தவிர்க்க, சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டியுள்ளதாக கூறி, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, 2.25 கோடி ரூபாய் அனுப்பும்படியும், இல்லையெனில், டிஜிட்டல் முறையில் கைது செய்து விடுவோம் என மிரட்டியும், பணம் பறித்துள்ளனர்.
இதையடுத்து தான், சைபர் கிரைம் மோசடிகாரர்களால் ஏமாற்றப்பட்டதை அந்த நபர் உணர்ந்துள்ளார். இது குறித்து தாம்பரம் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். இப்புகாரின்படி தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
தொடர்ந்து, மஹாராஷ்டிரா காவல் துறை உதவியுடன், மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாதில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த குற்றவாளிகள் ஸ்ரீகாந்த் சுரேஷ் ராவ் வடேகர், நரேஷ் கல்யாண் ராவ் ஷிண்டே ஆகிய இருவரை, ஜூலை 31ம் தேதி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து, ஒன்பது மொபைல் போன்கள், 16 ஏ.டி.எம்., கார்டு, ஏழு சிம் கார்டு, ஐந்து காசோலை புத்தகம், 2 ரப்பர் ஸ்டாம்ப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், குற்றவாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின், ஐந்து வங்கி கணக்குகளில் இருந்து, 9.36 லட்சம் ரூபாயை போலீசார் முடக்கியுள்ளனர்.
பின், இருவரையும், அவுரங்காபாதில் உள்ள, 16வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பயண அனுமதி ஆணை பெறப்பட்டது. அதன்பின், தாம்பரம் நீதித்துறை நடுவர் முன்னிலையில், ஆக., 2ம் தேதி ஆஜர்படுத்தி, ஆக., 15ம் தேதி வரை, நீதிமன்ற காவலில், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.