/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விரட்டி விரட்டி கடிக்கும் தெரு நாய்கள் வேடிக்கை பார்க்கும் தாம்பரம் மாநகராட்சி
/
விரட்டி விரட்டி கடிக்கும் தெரு நாய்கள் வேடிக்கை பார்க்கும் தாம்பரம் மாநகராட்சி
விரட்டி விரட்டி கடிக்கும் தெரு நாய்கள் வேடிக்கை பார்க்கும் தாம்பரம் மாநகராட்சி
விரட்டி விரட்டி கடிக்கும் தெரு நாய்கள் வேடிக்கை பார்க்கும் தாம்பரம் மாநகராட்சி
ADDED : பிப் 13, 2024 12:34 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கிழக்கு தாம்பரத்தில், தெரு நாய் கடித்ததால், 6 வயது சிறுவன் காயமடைந்தான்.
தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் திரிகின்றன. இதில் நோய் தாக்கி சொறி பிடித்த நாய்களும் அதிகமாக உள்ளன.
தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்வதாக அவ்வப்போது மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தாலும், நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன், கீழ்க்கட்டளையில் வெறி பிடித்த நாய் ஒன்று, பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்தது. 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். புகாரை அடுத்து, மாநகராட்சி சுகாதார துறையினர், அப்பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்கள் அந்த நாயை தேடினர்.
இந்த நிலையில், கிழக்கு தாம்பரத்தில், நேற்று முன்தினம் இரவு, தாயுடன் நடந்து சென்ற 6 வயது சிறுவனை, தெரு நாய் கடித்தது.
கிழக்கு தாம்பரம், செந்தமிழ் சேதுபிள்ளை தெருவை சேர்ந்தவர் அப்ஷரா பாத்திமா. இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, 6 வயது மகன் முகமது பாரூக் உடன், பஜனை கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, சாலையில் திரிந்த மூன்று நாய்கள் விரட்டியுள்ளன. ஒரு நாய் கடித்ததால் காயமடைந்த சிறுவனை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்று, சிகிச்சை அளித்தனர்.
இதேபோல், 50வது வார்டில், கல்யாண சுந்தரர், வ.உ.சி., தெருக்களிலும் பலரை, அங்கு திரியும் தெரு நாய்கள் கடித்ததாக, அந்த வார்டு கவுன்சிலர் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்னும் பல சம்பவங்கள், அடிக்கடி நடந்து வருகின்றன. எனவே, தெரு நாய்கள் விஷயத்தில், மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி, வார்டுகள் தோறும் சொறி, வெறி பிடித்த நாய்களை பிடிக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.